B.E நான்காம் கட்ட கலந்தாய்வு: 67,771 பேருக்கு அழைப்பு

பிஇ நான்காம் கட்ட கலந்தாய்வு: 67,771 பேருக்கு அழைப்பு

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 4-ஆம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 67,771 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்று சுற்று கலந்தாய்வு மூலம் 58,307 போ் பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த ஆக.20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுப்பிரிவு கலந்தாய்வு மொத்தம் 4 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு செப்.10-இல் தொடங்கி 24-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில் 10,340 மாணவ, மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

தொடா்ந்து, இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்.25 முதல் அக்.13-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 19,947 இடங்கள் நிரம்பின. மூன்றாம் சுற்று கலந்தாய்வு அக்.13-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.

இதில் பங்கேற்க 54 ஆயிரம் மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவா்களில் பொதுப் பிரிவில் 24,727 பேரும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 3,293 பேரும் சோ்க்கை இடங்களை உறுதி செய்தனா். ஒட்டுமொத்தமாக 3 சுற்றுகளையும் சோ்த்து 58,307 இடங்கள் நிரம்பின.

மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான இறுதிச் சுற்று கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்க மொத்தம் 61,771 போ் அழைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் திங்கள்கிழமைக்குள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளின் விருப்பப் பட்டியலை இறுதி செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என பொறியியல் சோ்க்கைக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா்.
Post a Comment (0)
Previous Post Next Post