அரசு பள்ளியின் சாவி மாறிப்போனதால் வகுப்புக்கு செல்ல முடியாமல் தவித்த மாணவர்கள்

குமாரபாளையம் அருகே அரசு பள்ளியின் சாவி மாறிப்போனதால் வகுப்புக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்தனர். இதையடுத்து கேட்டின் பூட்டு உடைத்து திறக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி சின்னப்பநாய்க்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 800 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் சிலம்ப பயிற்சியும் நடைபெறுகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் ஒரு சாவியை சிலம்ப பயிற்சியாளரிடம் வழங்கியுள்ளது.

நேற்று முன்தினம் மாலை சிலம்ப பயிற்சி நடைபெற்றதால், பள்ளியை திறக்கும் உதவியாளர் தலைமை ஆசிரியர் அறையில் இருந்த கேட் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். அதே சமயம் பயிற்சி முடிந்ததும் சிலம்ப பயிற்சியாளர் தன்னிடமிருந்த சாவியால் கேட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலை பள்ளிக்கு வந்த உதவியாளர் கேட்டின் பூட்டை திறக்க முயன்றார். ஆனால் பூட்டு திறக்கவில்லை. நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து செல்லும் போது, கேட் சாவி என நினைத்து வேறு ஒரு சாவியை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதனால் பூட்டை திறக்க முடியாமல் அவர் தவித்தார். அப்போது பள்ளிக்கு மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் வரத்தொடங்கியதால் கூட்டம் கூடியது. வகுப்பு துவங்கும் நேரம் கடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சிலம்ப பயிற்சியாளரிடமிருந்த சாவியை கொண்டுவர தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் உரிய நேரத்துக்கு அவரால் வர முடியாததால், வழக்கமான பள்ளி திறக்கும் நேரத்தைவிட 10 நிமிடம் தாமதமானது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த 6வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜ், கேட்டின் பூட்டை உடைத்து மாணவ மாணவிகளை உள்ளே அனுப்பி வைத்தார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Post a Comment (0)
Previous Post Next Post