ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசு தலைநகர் காபூலை கடந்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கைப்பற்றி, ஆட்சி அமைத்தது. அப்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. ஆனால், 2 மாதங்களுக்குப் பிறகு சிறுவர்கள், 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது 7 மாதங்களுக்கு பிறகு மார்ச் 23ம் தேதி துவங்கும் கல்வியாண்டின் தொடக்கத்தில் பெண்கள் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாட்டின் கல்வி அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, காபூல் உட்பட பல மாகாணங்களில் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவற்றை மூடும்படி தலிபான் அரசு உத்தரவிட்டது. மாணவிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இது குறித்து ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்லாமிய சட்டம் மற்றும் ஆப்கானிஸ்தான் கலாசாரத்தின் அடிப்படையில், பெண்களுக்கான கல்வி குறித்து வரையறை செய்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும். அதுவரையில் 6ம் வகுப்பு முதல் அனைத்து பெண்கள் பள்ளிகள் மறுஉத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியாண்டு தொடங்கிய நிலையில், 6ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டு இருப்பதற்கு சர்வதேச நாடுகள், அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.