இன்ஜினியரிங், எம்.பி.ஏ., பட்ட சான்றிதழுக்கு இனி ஜி.எஸ்.டி., கட்டாயம்

இன்ஜினியரிங், எம்.பி.ஏ., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடிக்கும் மாணவர்கள், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., கட்டணம் செலுத்தினால் தான், சான்றிதழ் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

தமிழக உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலை இணைப்பில், 500க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றுக்கு அங்கீகாரம் வழங்குதல், தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்குதல், பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற பணிகளுக்கு, கல்லுாரிகளிடமிருந்து அண்ணா பல்கலை கட்டணம் வசூலிக்கிறது.

இந்த கட்டண விபரம் குறித்த கணக்கு தணிக்கை அறிக்கையில், வரி பிடித்தம் குறித்து கணக்கு எதுவும் காட்டப்படவில்லை. அதனால், தமிழக வணிக வரித்துறை தரப்பில், அண்ணா பல்கலைக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில், 'அண்ணா பல்கலையின் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., கட்டணம் செலுத்த வேண்டும். 2017ல், ஜி.எஸ்.டி., வரி சட்டம் அமலான பின், வரி பிடித்தம் செய்திருந்தால், அதனை தாமதமின்றி அபராதத்துடன் செலுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்ணா பல்கலையில் இதுவரை ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்து அதற்கான எண் கூட பெறவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், 2017 முதல் ஜி.எஸ்.டி., வரி வசூலித்திருந்தால், அரசுக்கு இதுவரை 16 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்திருக்கும்; இந்த வருவாயை இனியும் இழக்காமல், மாணவர்களிடம் ஜி.எஸ்.டி., வரி வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வணிக வரித்துறையில் அண்ணா பல்கலை சார்பில் பதிவு செய்யப்பட்டு, புதிதாக ஜி.எஸ்.டி., எண் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து இணைப்பு கல்லுாரிகளுக்கும், அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

* இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரி மாணவர்கள், தங்களது கட்டணத்துடன் ஒவ்வொரு சேவைக்கும் ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும். இந்த வரித்தொகை அரசுக்கு செலுத்தப்படும்

* ஒவ்வொரு மாணவரும், பட்டப்படிப்பு முடித்து பட்டமளிப்பு சான்றிதழ் பெறுவதற்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியை கட்டணத்துடன் கட்டாயம் செலுத்த வேண்டும்

* அசல் சான்றிதழ் இல்லாமல், பட்ட சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் பிரதியான 'டூப்ளிகேட்' சான்றிதழ் பெறவும்; 'மைக்ரேஷன்' என்ற இடமாற்று சான்றிதழ், செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெறுவது, சான்றிதழின் உண்மைத்தன்மை சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கும், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்

* கல்வி கட்டணம், செமஸ்டர் தேர்வு கட்டணம், மறுமதிப்பீடு, டிரான்ஸ்கிரிப்ட் சான்றிதழ் பெறுவது, தர வரிசை, பயிற்று மொழி, சதவீத மாற்று மதிப்பெண் சான்றிதழ், புரொவிஷனல் சான்றிதழ்ஆகியவற்றுக்கு மட்டும், வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post