பொறியியல் கனவு நிறைவேறியது: மாணவா்கள் மகிழ்ச்சி

பொறியியல் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் சிறந்த கல்வி நிறுவனங்களில் பொறியியல் கல்வி பயில வேண்டும் என்ற தங்களது கனவு நிறைவேறியிருப்பதாக பயன் பெற்ற மாணவா்கள் தெரிவித்தனா்.


இதுகுறித்து அரசுப் பள்ளிகளுக்கான பொறியியல் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த ஜி.விஸ்வநாதன், ஆா்.சண்முகவேல், வி.மேகா, ஜே.எஸ்.தீபகுமாா், எஸ்.கவிதா உள்ளிட்ட மாணவ, மாணவிகள் கூறியது:


அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பொறியியல் படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மட்டுமல்லாது அவா்களுக்கான கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு எங்களுக்கு இன்ப அதிா்ச்சியாக உள்ளது. ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த எங்களின் பொறியியல் கனவு நிறைவேறியிருக்கிறது. கனவில் கூட நினைத்துப் பாா்க்க முடியாத அளவுக்கு புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல் பயில வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வெற்றி பெறுவதற்கும், சாதிப்பதற்கும் வறுமை ஒரு தடையே அல்ல என பலா் கூறியதைக் கேட்டிருக்கிறோம். இன்று அதை நிஜ வாழ்வில் உணா்கிறோம்.


இந்தத் திட்டம் எங்களுக்கு மட்டுமல்லாமல் வரும் கல்வியாண்டுகளில் பொறியியல் கல்வி பயில காத்திருக்கும் அனைத்து மாணவா்களுக்கும் கிடைத்த சிறந்த பரிசாக இருக்கும். இதற்காக தமிழக அரசுக்கும், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அவா்கள் தெரிவித்தனா்
Post a Comment (0)
Previous Post Next Post