மாணவர்கள் நலன் கருதி தனி கல்வி வாரியம் அமைப்பது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் வலியுறுத்தல்..!!

மாணவர்கள் நலன் கருதி தனி கல்வி வாரியம் அமைப்பது குறித்து புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தமிழ்நாடு அரசின் கல்வி முறையே பின்பற்றப்படுகிறது. இதனால் புதுச்சேரிக்கு என தனி கல்வி வாரியம் அமைக்க கோரி ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். மனுவில், 10, 12ம் வகுப்புகளுக்கு என தனி பாடத்திட்டத்தை வகுக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசலு அடங்கிய அமர்வு விசாரித்தது.


அப்போது தனி கல்வி வாரியம் அமைப்பது மாணவர்களின் நலனுக்கு சிறந்தது என்றாலும், அதிகாரிகள் தான் இதுகுறித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக புதுவை கல்வித்துறை செயலாளருக்கு 4 வாரங்களில் புதிய கோரிக்கை மனுவை அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், யூனியன் பிரதேசத்தில் அதிகரித்துள்ள பள்ளிகளின் எண்ணிக்கை, தனிப்பட்ட பாட திட்டம் வழங்குவதன் தேவை ஆகியவற்றை பரிசீலித்து 12 வாரங்களில் தகுந்த முடிவை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருக்கிறார்கள். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு புதிய அரசு விரைந்து தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment (0)
Previous Post Next Post