கடல்சார் படிப்புகளை முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு

கடல்சார் படிப்புகள் படிக்கும்மாணவர்களுக்கு நல்ல சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாக இந்திய கடல்சார்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மாலினி வி.சங்கர் தெரி வித்தார்.


இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாலினிவி.சங்கர், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:


சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் சென்னை, கொச்சி, கொல்கத்தா, மும்பை, நவிமும்பை, விசாகப்பட்டினம் ஆகிய 6இடங்களில் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் பி.டெக் (மரைன்இன்ஜினீயரிங் மற்றும் நேவல் ஆர்க்கிடெக்சர்), எம்.டெக் (மரைன் இன்ஜினீயரிங், நேவல் ஆர்க்கிடெக்சர்), எம்.டெக் (டிரட்ஜிங் அண்ட் ஹார்பர்இன்ஜினீயரிங்), எம்பிஏ (இண்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ்), எம்பிஏ (போர்ட்ஸ் அண்ட் ஷிப்பிங் மேனேஜ்மென்ட்), பி.எஸ்சி (நாட்டிக்கல் சயின்ஸ்) உட்பட 11 விதமான இளநிலை, முதுநிலை, முதுநிலை டிப்ளமோ படிப்புகள் உள்ளன.


கரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பிடெக் படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண்அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடல்சார் தொடர்பான படிப்புகளுக்கு வேலைவாய்ப்பு மிகுதியாக இருக்கிறது. பி.டெக் முடிப்பவர்களை மாதம் ரூ.3 லட்சம் வரையிலான சம்பளத்தில் முன்னணி நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்கின்றன. கடல்சார் படிப்புகள் முற்றிலும் உறைவிடபடிப்புகள் ஆகும். பி.டெக் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகும். எங்கள் மாணவர்களுக்கு வங்கிகளில் எளிதில் கல்விக்கடன் கிடைக்கும். காரணம், படித்து முடித்ததும் உடனடியாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து விடும்.


நடப்பு கல்வி ஆண்டில் பி.டெக் படிப்புகளில் சேர 13 ஆயிரம் பேர்விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் தரவரிசை பட்டியல் 2 வாரத்தில் வெளியிடப்பட்டு தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்படும். அக்டோபரில் வகுப்புகள் தொடங்கும்.


கல்வி, ஆராய்ச்சி, மாணவர் பரிமாற்றம் திட்டம் தொடர்பாக ரஷ்யா, பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் முன்னணி கடல்சார் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். மேலும், இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம், நியாட், இந்தியடிரெட்ஜிங் கார்ப்பரேஷன், தூத்துக்குடி வஉசி துறைமுகம் போன்றவற்றுடனும் ஒப்பந்தம் செய்துஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.


இவ்வாறு அவர் கூறினார்.


பேட்டியின்போது, பல்கலைக்கழக பதிவாளர் கே.சரவணன், டீன் கே.எம்.சிவகொழுந்து ஆகியோர் உடனிருந்தனர்.
Post a Comment (0)
Previous Post Next Post