பள்ளி சிறுவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட்

பீஹாரில் இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பீஹார் மாநிலம் கதிஹார் மாவட்டம் பாகுரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாஸ்தியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆஷிஷ், குரு சரன் விஸ்வாஸ். இவர்கள் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு, பீஹார் கிராமின் வங்கியில், பள்ளி சார்பில் கணக்கு துவக்கப்பட்டு உள்ளது. மாநில அரசு, பள்ளி சீருடை மற்றும் பள்ளி சார்ந்த பொருட்கள் வாங்குவதற்காக, இந்த வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி வருகிறது.


அந்த வகையில் பணம் வந்துள்ளதா? என தெரிந்து கொள்வதற்காக இரண்டு சிறுவர்களும் பெற்றோர்களுடன் பொது சேவை மையத்திற்கு சென்றனர். அங்கு, வங்கிக்கணக்கில் இருப்பு தொகையை பார்த்த போது, அவர்களுக்கும், ஊழியர்களுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆஷிஷ் வங்கிக்கணக்கில் ரூ.6.2 கோடியும், குரு சரண் வங்கிக்கணக்கில் ரூ.900 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.


இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உதயன் மிஸ்ரா கூறியதாவது: இரண்டு பள்ளி சிறுவர்களின் வங்கிக்கணக்கில் அதிகளவு பணம் டெபாசிட் செய்யப்பட்ட செய்தி எனக்கும் வந்தது. பணம் அனுப்பும் கணினி முறையில் சில பிரச்னைகள் இருந்ததாக வங்கி மேலாளர் தெரிவித்து உள்ளார். சிறுவர்களின் வங்கிக்கணக்கில் குறைவான பணம் உள்ளது. ஆனால், கணிணி கணக்கில் ரூ.900 கோடி எனக்காட்டுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்களுக்கும் அவ்வாறு பணம் ஏதும் வந்துள்ளதா? என அக்கிராமத்தினர் வங்கிக்கும், ஏ.டி.எம்., மையங்களுக்கும், படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Post a Comment (0)
Previous Post Next Post