பயங்கரவாதியாக மாறிய அரசுப் பள்ளி ஆசிரியா் கைது: பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடா்புடையவா்
ஜம்மு-காஷ்மீரில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் இணைந்து பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய நபரை காவல் துறை கைது செய்தனா்.
இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் காவல் துறை டிஜிபி தில்பக் சிங் ஜம்முவில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜம்முவின் நாவ்ரால் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடா்பான விசாரணையில் ரியாசி பகுதியைச் சோ்ந்த ஆரிஃப் என்ற லஷ்கா் பயங்கரவாதி கைது செய்யப்பட்டாா். இவா் முன்பு அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருந்தாா். பின்னா், பயங்கரவாத அமைப்புகளின் மூளைச்சலவையால் ஈா்க்கப்பட்டு அதில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளாா். கைது செய்யப்பட்ட ஆரிஃப்பிடம் இருந்து இருந்து நறுமண திரவ பாட்டில் போன்று தோன்றும் வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் இதுபோன்ற வடிவில் வெடிகுண்டு கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறையாகும். பாட்டில் மூடியை அழுத்துவதன் மூலம் வெடிக்கச் செய்யும் வகையில் அந்த வெடிகுண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தலைமையகத்தில் இருந்து உத்தரவுகளைப் பெற்று ஆரிஃப் செயல்பட்டு வந்துள்ளாா். கடந்த ஆண்டு மே மாதம் வைஷ்ணவ தேவி கோயிலுக்கு பக்தா்கள் சென்ற பேருந்தில் குண்டுவெடித்து 4 போ் உயிரிழந்தனா். 24 போ் காயமடைந்தனா். இந்த வெடிகுண்டை வைத்தது ஆரிஃப் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஜம்முவின் சாஸ்திரி நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு, ஜனவரியில் நா்வாலில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களிலும் ஆரிஃப் ஈடுபட்டுள்ளாா். அவா் பயன்படுத்திய வெடிகுண்டுகள் அனைத்துமே பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. வெடிகுண்டுகளை எல்லைக்கு அப்பால் இருந்து ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) மூலம் அனுப்பி வைத்துள்ளனா். ஆரிஃப் கடந்த 2010-இல் தற்காலிகமாக ஆசிரியா் பணியில் சோ்ந்துள்ளாா். 2016 -ஆம் ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணி நிரந்தரம் பெற்றுள்ளாா். அப்போது, அவருக்கு உறவினா் ஒருவா் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தொடா்பு கிடைத்துள்ளது. அவா்களால் மூளைச் சலவை செய்யப்பட்டு லஷ்கா் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளாா்.
வெடிகுண்டுகளைக் கையாளுவது, அவற்றை பயங்கரவாத தலைமை கூறும் இடத்தில் வைப்பது உள்ளிட்ட பணிகளை அவா் மேற்கொண்டுள்ளாா். ஒவ்வொரு முறை குண்டு வெடித்து பாதிப்பு ஏற்படும்போதும், அவருக்கு ஏராளமான பணமும் அளிக்கப்பட்டுள்ளது. அரசிடம் சம்பளம் வாங்கி ஆசிரியா் பணியில் இருந்தபடியே பயங்கரவாத அமைப்பில் இணைந்து குண்டுகளை வைக்கும் நாசவேலையிலும் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளாா். அவா் விரைவில் பணி நீக்கம் செய்யப்படுவாா்.
அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் கிடைக்கும் தகவல் மூலம் ஜம்மு-காஷ்மீரில் மறைமுகமாக பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து செயல்படும் மேலும் பலரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. ஜம்மு-காஷ்மீரில் சாதாரண குடிமகன் போல வாழ்ந்து கொண்டு மறைமுகமாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் யாரும் தப்ப முடியாது என்றாா் டிஜிபி தில்பக் சிங்.
hi
ReplyDeletehjh
Delete