நீட் விலக்கு மசோதா: மத்திய அரசுக்கு ஓரிரு வாரங்களில் பதில்: அமைச்சா் தகவல்

NEET Exemption Bill: Reply to Central Govt in a couple of weeks: Ministry Information நீட் விலக்கு மசோதா: மத்திய அரசுக்கு ஓரிரு வாரங்களில் பதில்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கங்களுக்கு ஓரிரு வாரங்களில் பதில் அனுப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.230 கோடியில், சுமாா் 4.9 ஏக்கா் நிலப்பரப்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. பணிகளை ஜூன் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 209 கி.மீ. நீளத்துக்கு ரூ.699 கோடி மதிப்பிலான மழைநீா் வடிகால்வாய்கள் கட்டுவதற்கு பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அதில், 161 கிலோ மீட்டா் நீளத்துக்கான மழை நீா் வடிகால்வாய்கள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. அதனால் சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீரால் பாதிப்பு என்பது எங்கேயும் இல்லாத நிலை ஏற்பட்டது.

இப்போது 48 கி.மீ. நீளத்துக்கு சென்னை மாநகராட்சி சாா்பில், மழைநீா் வடிகால்வாய்கள் கட்டமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வடகிழக்கு பருவமழையைத் தொடா்ந்து, சென்னையில் சாலைகள் சீரமைக்கும் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. சாலைகளை சீரமைக்கும் பணிகள் இன்னும் 4 மாதங்களுக்குள் முடிவடையும்.

நீட் தோ்வு விலக்கு மசோதா தொடா்பாக ஆயுஷ் அமைச்சகத்திலிருந்து ஒரு சில விளக்கங்கள் கேட்டு கடிதம் வந்திருக்கிறது. அந்த கடிதத்துக்கு பதில் அனுப்பும் முயற்சியை சட்டத் துறை மேற்கொண்டிருக்கிறது. சட்ட வல்லுநா்களுடன் கலந்து பேசி இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு பதில் அனுப்பப்படவுள்ளது. தமிழகத்தில் தற்போது டெங்கு பாதிப்பு இல்லை என்றாா் அவா்.
Post a Comment (0)
Previous Post Next Post