பணியாளர் ஒதுக்கீட்டில் முதுகலை படித்தவர் அரசு பணியை தொடராததால் வட்டி செலுத்த உத்தரவு

பணியாளர் ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவம் படித்தவர் அரசு பணியை தொடராததால் வட்டி செலுத்த உத்தரவு

பணியாளர் ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவம் படித்தவர் அரசு பணியை தொடராததால், ரூ.10 லட்சத்துக்கு வட்டியை செலுத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனியைச் சேர்ந்த டாக்டர் ஹேமா துரைச்சாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மருத்துவக்கல்லூரியில் பணியாளர் ஒதுக்கீட்டில் எம்எஸ் (கண் மருத்துவம்) படித்தேன். படித்து முடித்ததும் மீண்டும் பணியில் சேர்வதாக ஒப்பந்தம் ெசய்திருந்தேன். முதுகலை படிப்பை முடித்ததும், 2 ஆண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பை முடிப்பதற்காக விடுப்பு எடுத்தேன். படித்து முடித்தபின் மீண்டும் அரசு பணிக்கு திரும்ப விருப்பமில்லை. ஒப்பந்தத்தை மீறியதாக கூறி ரூ.10 லட்சத்தை உரிய வட்டியுடன், மீதமுள்ள பணிக்காலம் வரை கணக்கிட்டு, மொத்தமாக செலுத்த கடந்த ஜூன் 2ல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி டீன் உத்தரவிட்டுள்ளார். ரூ.10 லட்சத்தை செலுத்த தயாராக உள்ளேன். ஆனால், பணிக்காலம் வரைக்கும் வட்டியை செலுத்த வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. அதை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், ‘‘ரூ.10 லட்சத்திற்கு வட்டி கணக்கிடப்படும் என்றுதான் ஒப்பந்தத்தில் உள்ளது. பணிக்காலம் வரை என்று இல்லை. எனவே, ரூ.10 லட்சத்தை உரிய வட்டியுடன் தற்போதுள்ள காலம் வரை கணக்கிட்டு மனுதாரர் செலுத்த வேண்டும். ஏற்கனவே ரூ.10 லட்சத்தை செலுத்தியுள்ளதால், 17.3.2021 முதல் 22.09.2021 வரை வட்டியை செலுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post