10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் புறக்கணிப்பு; பதிவு மூப்பு பட்டதாரிகள் போராட்டம்

10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் புறக்கணிப்பு பதிவு மூப்பு பட்டதாரிகள் டிபிஐ வளாகத்தில் முற்றுகை: இரவில் தொடர்ந்த போராட்டம்

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நியமனங்கள் வழங்க வேண்டும் என்று கோரி டிபிஐ வளாகத்தில் நேற்று முற்றுகையில் ஈடுபட்டனர். தற்போது, காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களில் தங்களை பணியர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு படித்து பட்டம் பெற்று வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி, முதற்கட்டமாக சுமார் 20 ஆயிரம் பேருக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள சுமார் 6 ஆயிரம் பேருக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனங்கள் வழங்க இருந்த நிலையில், தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஒன்றிய அரசு அறிவித்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவித்த விதிகளை பின்பற்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில், 2010ம் ஆண்டுக்கு முன்னதாக பதிவு மூப்பு பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டு, ஒரு பகுதியினர் பணி நியமனங்கள் பெற முடியாமல் இருந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு மேற்கண்ட சான்று சரிபார்ப்பு முடிக்கப்பட்ட பதிவு மூப்பு பட்டதாரிகளுக்கு பணி நியமனம் வழங்க முன்வரவில்லை. இதையடுத்து, தற்போது மேற்கண்ட பட்டதாரிகள், பணி நியமனங்கள் வழங்க வேண்டி டிபிஐ வளாகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளிக் கல்வி ஆணையரிடம் பேச அழைத்தனர். ஆனால், ஆணையரை சந்திக்க மறுத்துவிட்டனர். ஏற்கனவே ஆசிரியர்கள் பலமுறை சந்தித்து கொடுத்த மனுக்களை ஆணையர் ஏற்கவில்லை என்று தெரிவித்தனர். அதனால், தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் ஆசிரியர்கள் சார்பில் சிலரை போலீசார் அழைத்து சென்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், முற்றுகை நீடித்தது. அதனால் அவர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் இரவு வரை காவலில் வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இரவிலும் ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். * திமுக அரசு கைவிடாது

போராட்டம் குறித்து, தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ரத்தினக்குமார் கூறியதாவது: கடந்த திமுக ஆட்சியின் போது பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்கள் போக மீதம் இருக்கின்ற 2 ஆயிரம் பிஎட் பட்டதாரிகளுக்கும், 1500 இடைநிலை ஆசிரியர்களுக்கும் தற்போதுள்ள காலிப் பணியிடங்களில் என்சிடிஇ விதிகளின்படி தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளித்து எங்களுக்கு வயது வரம்பின்றி, தற்போதுள்ள காலிப் பணியிடங்களில் பணி நியமனம் வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டில் நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம். தற்போது திமுக ஆட்சியும் வந்துள்ளது. தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் 3 ஆயிரம் பேர் உள்ள எங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். முதல்வர் இதற்கு ஒரு தீர்வு காணும் வரை இந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம். அதிமுக அரசு எங்களை புறக்கணித்தது. எங்களை திமுக அரசு கைவிடாது என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment (0)
Previous Post Next Post