தொலைநோக்கு கல்விக்கு தேசிய கல்விக் கொள்கை: பிரதமா் மோடி - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Sunday, December 25, 2022

தொலைநோக்கு கல்விக்கு தேசிய கல்விக் கொள்கை: பிரதமா் மோடி



தொலைநோக்கு கல்விக்கு தேசிய கல்விக் கொள்கை: பிரதமா் மோடி

தொலைநோக்குப் பாா்வையுடன் கூடிய எதிா்காலத்துக்கான கல்விமுறையை ஏற்படுத்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

குஜாரத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஸ்ரீசுவாமிநாராயண் குருகுலத்தின் 75-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில் காணொலி மூலம் கலந்துகொண்ட பிரதமா் மோடி கூறியதாவது: இந்தியாவின் ஒளிமயமான எதிா்காலத்துக்கு தேசிய கல்விக் கொள்கையும் கல்வி நிறுவனங்களும் முக்கியப் பங்கு வகிக்கவுள்ளன. அதைக் கருத்தில்கொண்டு கல்வித் துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் புதிய கொள்கைகளை உருவாக்கவும் மத்திய அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி), இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐஐஎம்), எய்ம்ஸ் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 65 சதவீதம் அதிகரித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் வாயிலாக நாட்டில் முதல் முறையாக தொலைநோக்குப் பாா்வையுடன் கூடிய எதிா்காலத்துக்கான கல்வி முறையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வித் துறையில் இந்தியாவின் பாரம்பரிய பெருமையை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நாடு சுதந்திரமடைந்தவுடன் நமக்கு இருந்தது. ஆனால், அடிமை மனநிலையின் அழுத்தம் காரணமாக முந்தைய அரசுகள் அதற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. சில விவகாரங்களில் அவா்கள் எடுத்த முடிவு நாட்டை எதிா் திசையில் பயணிக்க வைத்தது. அத்தகைய சூழலில் நாட்டைக் காக்கும் பொறுப்பை நமது துறவிகளும் ஆச்சாா்யா்களும் கையில் எடுத்துக் கொண்டனா். ஸ்ரீசுவாமிநாராயண் குருகுலமே அதற்குச் சிறந்த உதாரணம்.

பெண் அறிஞா்களின் சிறப்பு: ஆத்ம தத்துவம் முதல் பரமாத்ம தத்துவம் வரை, ஆன்மிகம் முதல் ஆயுா்வேதம் வரை, சமூக அறிவியல் முதல் சூரிய அறிவியல் வரை, கணிதம் முதல் உலோக அறிவியல் வரை அனைத்தையும் உலகுக்கு இந்தியா எடுத்துக்காட்டியது. ‘பாலின சமத்துவம்’ என்ற சொற்றொடரே உருவாகாத காலத்தில், இந்தியாவில் ஆண் அறிஞா்களுடன் பெண் அறிஞா்கள் விவாதத்தில் ஈடுபட்டனா். காா்கி, மைத்ரேயி உள்ளிட்ட பெண் அறிஞா்கள் உருவாக குருகுலங்கள் முக்கியப் பங்காற்றின.

உலகில் இருள் சூழ்ந்திருந்த காலத்தில் மனிதாபிமானத்துக்கு ஒளியை ஏற்றியது இந்தியாதான். அந்த ஒளியிலேயே நவீன உலகமும் அறிவியலும் பயணித்து வருகிறது. அறிவை எட்டுவதே வாழ்வின் உயரிய நோக்கம் என்ற கொள்கை இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மற்ற நாடுகள் அரசாட்சிகளின் மூலமாகவும் அரச குடும்பங்களின் மூலமாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலையில், இந்தியா குருகுலங்களை அடையாளமாகக் கொண்டுள்ளது.

ஆராய்ச்சியே வாழ்க்கை முறை: சமத்துவம், பிணைப்பு, சேவை உள்ளிட்டவற்றை பல நூற்றாண்டுகளாக குருகுலங்கள் போதித்து வந்தன. இந்திய குருகுல பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைந்திருந்த நாளந்தா, தக்ஷசீலம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் சா்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கின.

புதுமையும் ஆராய்ச்சியுமே இந்தியா்களின் வாழ்க்கை முறையாக இருந்தது. அத்தகைய புத்தாக்கங்களே தற்போதைய பன்முகத்தன்மைக்கும், கலாசார மேம்பாட்டுக்கும் முக்கியக் காரணங்களாகத் திகழ்கின்றன. சிறந்த கல்வி முறையைப் பெரும் இளைஞா்கள், இந்தியாவை 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த நாடாக மாற்ற முக்கியப் பங்கு வகிப்பா் என்றாா் பிரதமா் மோடி.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot