அம்பேத்கா் படிப்புகள் துறை: நீதிமன்றத்தில் அரசு தகவல்

அம்பேத்கா்படிப்புகள் துறையைத் தொடங்க இயலவில்லை:நீதிமன்றத்தில் அரசு தகவல்

திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் நிதிநிலை நெருக்கடி காரணமாக டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் படிப்புகள் துறையை தற்போதைக்கு தொடங்க இயலாது என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கா் படிப்புகள் என்ற பெயரில் தனி துறையை அமைக்க 2006-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை அத்துறையை தொடங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு முன்னாள் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான இளங்கோவன் சென்னை உயா் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமாா் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழகத்தின் தரப்பில், ‘பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி உள்ளதால் தற்போதைக்கு இந்த புதிய துறையை தொடங்க இயலாது. நிதி நிலை சீரானதும் இத்துறையை தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘நிதிநிலை சீராகும் பட்சத்தில் அடுத்த கல்வியாண்டில் அம்பேத்கா் படிப்புகள் துறையை தொடங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கும், பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.
Post a Comment (0)
Previous Post Next Post