மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை

20.09.22*செவ்வாய்*

*மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்*-
*ஆசிரியர் சங்கம் கோரிக்கை*

*நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்*
*பதிவு எண் 239/2017*

அனுப்புநர்:-
ஆ.இராமு,
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
7373761517.

பெறுநர்:-
(பணிவோடு வணங்குகிறேன்)
மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அவர்கள்,
தலைமை செயலகம்,
சென்னை -09.

ஐயா,
          பொருள்:-
 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு  கலந்தாய்வை விரைந்து  நடத்த வேண்டுதல் சார்பு:-

தமிழக அரசின் நேர்மையான செயல் பாடுகளால் 2021- 22 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக வரலாற்றில் முதல்முறையாக 100% நேர்மையாக நடந்ததால் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பலன் அடைந்து உள்ளனர்.
இதற்காக தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிலையில்  நடப்பு 2022 -2023 கல்வி ஆண்டு ஜூன் 13 அன்று  
பள்ளிகள் தொடங்கி  நான்கு மாதங்கள் நிறைவு பெற உள்ளது.

இந்த நிலையில் நடப்பு 2022-2023  கல்வி ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மட்டும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிப்பு வெளியானது.

இதனால் சில தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பதவி உயர்வு  கலந்தாய்வுக்கு இடைக்கால தடையும் பெற்றனர் .
தற்போது அது சார்ந்த அனைத்து வழக்குகளையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.எனவே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் 

மேலும் நடப்பு 2022-2023 கல்வி ஆண்டிற்கான தரம் உயர்த்தப்பட்ட  மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை உடனடியாக வெளியிட்டு,
 அந்த பள்ளிகளையும் மேல்நிலைப்பள்ளி தலைமை பதவி உயர்வு கலந்தாய்வில் உட்படுத்தி பதவி உயர்வு கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும்.

மேலும் நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணி இடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட முதுகலைப் ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் மூலம் முதுகலை ஆசிரியர்கள் பணிஅமர்த்தப் படுவதற்கு முன்பு 
  முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்  மாறுதலும், 
தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம்  மாறுதல் கலந்தாய்வையும் நடத்த வேண்டும்.

தொடர்ந்து 01.01.2022 நிலவரப்படி தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வும் வழங்கிட வேண்டும்

மேலும் உள் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் கலந்தாய்வில் சென்றபிறகு ஏற்படும் காலிப்பணியிடங்களை உள் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் எடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்ற கலந்தாய்வில் கணவன் மனைவி பணி முன்னுரிமை மூலம் குறைந்த பணி மூப்பு உடைய ஆசிரியர்கள் பெரிதும் பலன் அடைந்தனர்.
நடப்பு கல்வியாண்டில் அதிக பணி மூப்பு உடைய ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த விதிகளை உருவாக்க வேண்டும்

முந்தைய ஆண்டில் பணிநிரவலால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்


மேலும் கடந்த ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களையும் நடப்பாண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் உட்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கடந்த ஆண்டில்  கலந்தாய்வு நடைபெற்ற போது  இணையதள  சேவை வேகம் குறைவாக இருந்தது.
நடப்பாண்டில் அது   சரிசெய்யப்பட வேண்டும்.
 மேலும் நடப்பாண்டில் காலாண்டு தேர்வு விடுமுறையிலோ அல்லது அதனைத் தொடர்ந்து வரும் பள்ளி வேலை நாட்களின் போது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்.
 கலந்தாய்வை கடந்த ஆண்டைப் போலவே 100% நேர்மையாகவும்  நடத்த தாங்கள் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்து  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  பதவி உயர்வுக்காக காத்திருக்கும் பணி மூப்பு உடைய முதுகலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்றும் தங்களைப் பணிவோடும் கனிவோடும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

ஆ.இராமு
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
7373761517.

இடம்:- நாமக்கல்
தேதி:- 20.09.22

நகல்:-

பணிவோடும் கனிவோடும் அனுப்பி வைக்கிறேன்
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிச்செயலாளர் அவர்கள்,
தலைமைச் செயலகம், சென்னை- 9.

மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள்,
தலைமை செயலகம், சென்னை 9.

மதிப்புமிகு
நேர்மைமிகு 
பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள்,
பள்ளிக் கல்வி ஆணையரகம், சென்னை-6.

Post a Comment (0)
Previous Post Next Post