கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு மாணவர்களிடையே கடும் போட்டி !

தமிழ்நாட்டில் இந்தஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை நாடி செல்லும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான முடிவுகள் வெளியான நாளில் இருந்து இதுவரை சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்து உள்ளனர்.

பொறியியல் கல்லூரிகளுக்கு செல்பவர்களை விட கலை கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் வழக்கம் போல இந்த ஆண்டும் பி.காம் படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் அதிக மோகம் இருக்கிறது. அனைத்து கலை கல்லூரிகளிலும் பி.காம் படிப்புக்கு இடம் பிடிக்க மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நடைபெறுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பி.காம். (ஜெனரல்), பி.காம் (கார்ப்பரேட் செகரட்டரி ஷிப்) ஆகிய படிப்புகளுக்கு இந்த ஆண்டு இரட்டிப்பு மடங்கு மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதனால் பி.காம் படிப்புக்கு இடம் கிடைக்குமா? என்பதில் பெரும்பாலான மாணவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து மாணவர்களின் கவனம் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு மீது திரும்பியிருக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்து படிப்பதற்காக அதிக அளவு மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். குறிப்பாக மாணவிகள் மத்தியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மோகம் அதிகமாக உள்ளது. இதனால் மகளிர் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு பல மடங்கு அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே சி.பி.எஸ்.சி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் 10 தினங்களில் வர உள்ளன. அதுவரை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவு செய்யப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. எனவே சி.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியானதும் கல்லூரிகளில் இடத்துக்கு மோதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
Post a Comment (0)
Previous Post Next Post