அரசாணை வெளியாகி 5 ஆண்டுகளாகியும் மாணவிகளுக்கென தனி பள்ளி துவங்குவதில் சுணக்கம்.

Ramanathapuram : புதுமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு பாலரும் கல்வி பயில்வதால் மாணவிகள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு கூட மிகுந்த சிரமம் அடைந்து வருவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் அருகே புதுமடம் பகுதியில் பெண்களுக்கு தனியாக உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் தொடங்க அரசாணை வெளியிட்டும், ஐந்து ஆண்டுகளாக கட்டுமான பணிகள் கிடப்பில் இருப்பதால் மாணவிகள் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ளது புதுமடம் கிராமம். இந்த பகுதியில் சுமார் 20,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் இருபாலரும் கல்வி பயின்று வருகின்றனர். இங்கே சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் பயில்கின்றனர். இந்நிலையில் மாணவிகள் உயர்நிலை பள்ளி தனியாக அமைத்து தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு பெண்கள் உயர்நிலைப் பள்ளி தனியாக அமைத்துக் கொள்ள அரசாணை வழங்கப்பட்டது. இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கல்விக் கொடையாளர் தன்னுடைய ஐந்து ஏக்கர் நிலத்தை கல்விக்காக தானமாக வழங்கினார்.

ஆனால் தற்போது வரை கல்வி கற்க மாணவிகளுக்கு தனியாக கட்டுமான பணிகள் துவங்காததால், மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேல்நிலைப் பள்ளியில் இரு பாலரும் கல்வி பயில்வதால் மாணவிகள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு கூட மிகுந்த சிரமம் அடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், மாணவர்களால் கடுமையான மன உளைச்சல் ஏற்படதாகவும், இதனால் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதில் சிக்கல் உண்டாகி இருப்பதாகவும், அது தொடர்பாக பெற்றோர்களிடம் மாணவிகள் கண்ணீர் விட்டு அழுவதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என கூறுகின்றனர். புதுமடம் அரசு மேனிலைப்பள்ளி

இது தொடர்பாக பலமுறை கல்வித்துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை என்றும், இதனால் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாணவிகளை மாற்றக்கூடிய அவலமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் அரசுக்கு தானமாக கொடுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய சூழலும் உருவாகி இருப்பதாகவும், தமிழக அரசு கல்வித்துறை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த பகுதியில் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளியை உருவாக்கித் தர வேண்டும் எனவும் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் தமிழக அரசு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்னர்.
Post a Comment (0)
Previous Post Next Post