தமிழகம் ஒப்படைத்த மருத்துவ 'சீட்': உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

மருத்துவக் கல்வியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில், தமிழக அரசு ஒப்படைத்துள்ள, 92 இடங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக, 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்தது. இதில், தமிழகத்தில் அரசுப் பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்ட 92 இடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து, இந்த இடங்களை, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு ஒப்படைத்தது. இந்நிலையில், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்காக புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இடங்களில், இந்த 92 இடங்களையும் சேர்க்க வேண்டும். ஏற்கனவே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்' என, சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார், சுதான்ஷு துலியா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாவது:

சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் நிரப்பப்படாத, 92 இடங்களை தமிழக அரசு, தேசிய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைத்து உள்ளது. இவ்வாறு காலியாக உள்ள இடங்களை நிரப்புவது தொடர்பாக உச்ச நீதிமன்றம், கடந்த மே 9ல் சில உத்தரவுகளை பிறப்பித்தது. இதன்படி, ஏற்கனவே படிப்பில் சேர்ந்தவர்களுக்கு கவுன்சிலிங்கில் வாய்ப்பு தரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவும், அதுபோன்ற கோரிக்கையாக உள்ளதால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post