பல்கலை பேராசிரியர்களுக்கு 'வாய்ப்பூட்டு': கிளம்பியது எதிர்ப்பு

பேராசிரியர்களுக்கு 'வாய்ப்பூட்டு'

மதுரை காமராஜ் பல்கலையில் பேராசிரியர்கள், அலுவலர்கள் பத்திரிகை, ஊடகங்களுக்கு பேட்டி, அறிக்கை அளிக்க தடை விதித்து பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பல்கலையின் அனைத்து நோடல் அதிகாரிகள், பேராசிரியர்கள், புலத் தலைவர்களுக்கு பதிவாளர் அனுப்பிய உத்தரவு விவரம்: பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆய்வு மாணவர்கள் அனுமதியின்றி பத்திரிகைகளிடம் செய்தியாக, அறிக்கையாக தெரிவிக்கக்கூடாது. செய்தி அறிக்கை வெளியிட முன்அனுமதி பெற வேண்டும். முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள் வருகை இருப்பின் இரண்டு வாரங்களுக்கு முன் தெரிவிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் வகுப்பறைகளை மாணவர்கள், ஆசிரியர்கள் துாய்மையாக வைத்திருத்தல் வேண்டும். மாணவர்களின் குறைகளை கேட்க 'மாணவர் குறைதீர்க் குழு' ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர்கள் கூறியதாவது:

இது பேராசிரியர்களுக்கு போடப்பட்டுள்ள 'வாய்ப்பூட்டு'. இதனால் நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள ஆரோக்கிய சூழல் பாதிக்கும். இங்கு பல சங்கங்கள் உள்ளன. அவற்றில் அலுவலர்கள், பேராசிரியர்கள் பொறுப்புகளில் உள்ளனர். பல கோரிக்கைகள் தினமலர் உள்ளிட்ட பத்திரிகை செய்திகள் மூலம் தான் நிறைவேறுகின்றன.

சமீபத்தில் விடுதி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதிகளில் ஏற்கனவே பல மாதங்கள் அவர்கள் குறிப்பிட்ட குறைகள் இருந்தன. ஆனால் பத்திரிகை செய்தி வெளியான பின் தான் அப்பிரச்னையே துணைவேந்தருக்கு தெரிய வந்தது.

பல்கலை பெயர் கெடும் வகையில் தவறான செய்திகளை பேராசிரியர்கள் கொடுக்க மாட்டார்கள். எங்கள் மீது அவநம்பிக்கை வேண்டாம். பல்கலை வளர்ச்சி, கல்வி மேம்பாடு தான் எங்கள் குறிக்கோள். இதை பதிவாளர் புரிந்துகொள்ள வேண்டும். அவரது இந்த 'வாய்ப்பூட்டு' உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்றனர்.
Post a Comment (0)
Previous Post Next Post