சூரிய சக்தி பம்ப் செட் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்


சூரிய சக்தி பம்ப் செட் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்: காஞ்சி கலெக்டர் தகவல் - Farmers can apply to benefit from Solar Pump Set Scheme: Collector Information

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் முதலமைச்சரின் சூரியசக்தி பம்ப் செட்கள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரை திறன் வரையிலான மின்கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்கள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் முதல் தவணையாக 2000 சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்கள் ரூ.43.556 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள் நிலநீர் பாதுகாப்பான குறு வட்ட பகுதிகளில் இருத்தல்வேண்டும். இதர பகுதிகளில் ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் எஞ்சின் பயன்படுத்தி வரும் பட்சத்தில் அதற்கு மாற்றாக சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்களை அமைத்துக்கொள்ளலாம். இதனால் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்பு கோரி ஏற்கனவே விண் ணப்பித்துள்ள விவசாயிகளின் முன்னுரிமை பாதிக்கப்படாது. மேலும் சூரிய சக்தி பமப்செட்களை அமைக்க விரும்பும் விவசாயிகள், இலவச மின்இணைப்பு கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை.

பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு, சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்களை அமைத்திட, வேளாண்மை பொறியியல் துறை உபகோட்டங்களில் விண்ணப்பம் அளிக்கும்போது சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளித்திடவேண்டும். வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீர்நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள், கான்கீரிட் காரை இடப்படாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள், நிலத்தடி நீரை இறைப்பதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட தொலைவிற்குள் நிலத்தடி நீரை இறைக்க வேண்டுமானால் பொதுப்பணித்துறையிடமிருந்து தடையில்லா சான்று பெறவேண்டும். மேற்படி தொலைவு வரம்பிற்குள் உள்ள நீர் ஆதாரங்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்களை அமைத்திட விண்ணப்பிக்கும் பொழுது பொதுப்பணித்துறையின் தடையில்லா சான்றினை இணைத்திடவேண்டும். இத்திட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

எனவே, மானிய விலையில் தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்கள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள் அருகில் உள்ள உபகோட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அல்லது மாவட்ட அளவில் செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி செயற்பொறியாளர், 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35 மற்றும் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் - 631502. 90030 90440 கைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post