TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 5,529 பணியிடத்துக்கு 11.78 லட்சம் பேர் போட்டி

குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு திட்டமிட்டப்படி வருகிற 21ம் தேதி நடைபெறும். 5,529 பணியிடத்துக்கு நடத்தப்படும் தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவி(நேர்முக தேர்வு பதவி) 116 பணியிடம். குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கான முதல்நிலை தேர்வு வரும் 21ம் தேதி நடைபெறும். சென்ற ஆண்டுகளை விட இந்த தேர்வுக்கு கூடுதலாக 1.5 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். 21ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் முதல்நிலை தேர்வு நடைபெறும். தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்கே தேர்வு நடைபெறும் இடங்களுக்கு வர வேண்டும். காலை 8.59 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு பிறகு வரக்கூடிய தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே போல காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணிக்கு முடிந்தாலும் கூட, பிற்பகல் 12.45 மணி வரை தேர்வர்கள் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் இத்தேர்வை 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் எழுத உள்ளனர். இன்று(நேற்று) பிற்பகல் 3.15 வரை 9 லட்சத்து 10,327 பேர் வரை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து இருக்கிறார்கள். இன்னும் இரண்டு, மூன்று தினங்கள் இருக்கின்ற காரணத்தால், தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 11 லட்சத்து 78,175 தேர்வர்களுமே ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து விடுவார்கள். குரூப் 2, குரூப் 2ஏ தேர்வை எழுதுபவர்களில் 4 லட்சத்து 96 ,247 பேர் ஆண்கள், 6 லட்சத்து 81,880 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 48 பேர், மாற்று திறனாளிகள் 14,531 பேரும் தேர்வு எழுத உள்ளனர். இரண்டு கைகள் இல்லாதவர்கள், கண்பார்வையில்லாமல் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவி செய்வதற்காக பல்வேறு மையங்களில் 1800 பேர் ஈடுபடுத்தபடுகிறார்கள். குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கு தமிழ் வழியில் படித்த 79,942 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வை பொறுத்தவரை ஜெனரல் இங்கிலிஷ் சப்ஜெக்டில் 2 லட்சத்து 31,586 தேர்வு எழுத உள்ளனர். ஜெனரல் தமிழ் பிரிவில் 9 லட்சத்து 46,589 பேர் தேர்வு எழுகிறார்கள். 38 மாவட்டங்களில் 117 இடங்களில் 4012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுக்காக 4012 தலைமை கண்காணிப்பாளர்கள், 58,900 கண்காணிப்பாளர்கள், 323 பறக்கும் படையினரும், 6,400 பரிசோதனை குழுவும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குரூப் 2, குரூப் 2ஏ தேர்வை அதிகப்பட்சமாக சென்னையில் 7 மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுதுகின்றனர். மிக குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் 5,624 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 6 லட்சத்து 93 ஆயிரத்து 361 பேர் முதல்நிலை தேர்வுக்கு எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கான வினாக்கள் கொள்குறி வகையில் இருக்கும். மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஜெனரல் தமிழ் அல்லது ஜெனரல் இங்கிலிஸில் 100 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவில் 75 கேள்விகள், திறனறிவு தேர்வில் 25 கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் மெயின் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. மெயின் தேர்வுக்கு ஒரு பணிக்கு 10 பேர் என்ற அடிப்படையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்கள். தற்போதைய பணியிடங்கள் அடிப்படையில் 55 ஆயிரம் பேர் வரை மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஒரே மார்க்கில் 100 பேர் வருகிறார்கள் என்றால் 100 பேரையும் மெயின் தேர்வு எழுத அனுமதிப்போம். இதனால் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 1 பணியிடத்துக்கு 12 பேர் என்ற அடிப்படையில் மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் ஒரிஜினல் வாட்டர் கலரில் வழங்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டை கலர் மற்றும் பிளாக் அன்ட் ஒய்ட்டில் ஏதுவென்றாலும் பிரிண்ட் எடுத்து கொண்டு வரலாம். ஹால் டிக்கெட் 4 பக்கம் உள்ளது. அந்த 4 பக்கத்தையும் தேர்வர்கள் கொண்டு வர வேண்டும். தேர்வர்களின் அடையாளத்தை கண்காணிக்கும் வகையில் அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று கொண்டுவர வேண்டும். அதே நேரத்தில் தேர்வர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையில் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி தேர்வர்கள் மாஸ்க் அணிந்து வந்தால் நல்லது. குரூப் 1 தேர்வுக்கான ரிசல்ட்டை இந்த மாதம் இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளோம். விடைத்தாள் திருத்தும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது 100 இடங்கள் கூடுதலாக நிரப்ப வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment (0)
Previous Post Next Post