பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு 15 முதல் 18 வயதுக்குள்ளவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று சமீபத்தில் வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டது. இதையடுத்து சென்னை நகரில் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பு ஊசி போடுவதற்கான ஏற்பாடுகளை அனைத்து தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளார்.
அதில், கடந்த டிசம்பர் 31ம் தேதி அரசு வெளியிட்டுள்ள ஆணையின்படி, ஜனவரி 10ம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை என அறிவித்துள்ளது. ஆகவே அந்த நாட்களில் எந்த ஒரு பள்ளியிலும் மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தக் கூடாது. மேலும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளில் படித்து வரும் மாணவ மாணவியருக்கு ஏற்கெனவே தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த வேண்டும். இது தவிர 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்காக மருத்துவப் பணியாளர்கள் தங்கள் பள்ளிகளுக்கு வரும் போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.