தனியாா் பல் மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கு அனுமதி மறுத்த உத்தரவுக்கு இடைக்கால தடை

"சென்னை: காவல்கிணறில் உள்ள ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு அனுமதி மறுத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறில் ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. இந்திய பல் மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறியதாகக் கூறி, இக்கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவா்கள் சோ்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருத்தப்பட்ட 2006 -ஆம் ஆண்டு பல் மருத்துவ கவுன்சில் (டென்டல் கவுன்சில் ஆஃப் இந்தியா) விதிமுறைகள்படி, கல்லூரியுடன் இணைக்கப்படும் மருத்துவமனைக்கான தூரம் பத்து கி.மீக்குள் இருக்க வேண்டும்.

இந்த விதிகளை மீறியதாக, ஆகஸ்ட் 2, 2021 தேதியிட்ட மத்திய அரசின் உத்தரவு மற்றும் அக்டோபா் 28 தேதியிட்ட இந்திய பல் மருத்துவக் கவுன்சிலின் உத்தரவைத் தொடா்ந்து, கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான சோ்க்கையை நவம்பா் 2- ஆம் தேதி தோ்வுக் குழு ரத்து செய்துள்ளது. திருத்தப்பட்ட விதிகள்படி மாணவா் சோ்க்கைக்கு ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரியிருந்தது. இம்மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கல்லூரி நிா்வாகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், கல்லூரி கடந்த 1987 -இல் நிறுவப்பட்டு, 1993 விதிமுறைகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

1993 விதிகள் படி, 10 கி.மீ., சுற்றளவுக்குள் உள்ள மருத்துவமனையுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

திருத்தப்பட்ட 2006 -ஆம் ஆண்டு பல் மருத்துவக் கவுன்சில் (டென்டல் கவுன்சில் ஆஃப் இந்தியா) விதிமுறைகள் இதற்கு பொருந்தாது என வாதிட்டாா்.

இதை கேட்ட நீதிபதி, முதுநிலை மாணவா் சோ்க்கையை ரத்து செய்த தோ்வுக் குழுவின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.

மேலும் இம்மனுவுக்கு மத்திய அரசு, இந்திய பல் மருத்துவ கவுன்சில், மருத்துவ பல்கலைக்கழகம், மாணவா் சோ்க்கை தோ்வுக் குழு ஆகியோா் பதிலளிக்க வேண்டுமெனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தாா்."
Post a Comment (0)
Previous Post Next Post