குரு பெயர்ச்சி - 2021 பொதுப் பலன்கள்

2021ஆம் ஆண்டு நடைபெறும் குரு பெயர்ச்சி தொடர்பான பொதுப் பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

இந்த பிலவ வருஷம் தட்சிணாயனம் சரத் ருது கார்த்திகை மாதம் 4-ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவிதியை திதி, கடக லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம், அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், உதயாதி 44 நாழிகை அளவில் இரவு 11.28 மணிக்கு சூரிய பகவானின் ஹோரையில், அவிட்டம் நட்சத்திரம் 2-ஆம் பாதத்திலிருந்து அவிட்டம் நட்சத்திரம் 3-ஆம் பாதத்திற்கு அதாவது "பிரகஸ்பதி' என்கிற தேவர்களுக்கு ஆசானாகிய குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

இங்கு 12. 04. 2022 வரை சஞ்சரித்துவிட்டு 13. 04. 2022 அன்று பிற்பகல் 03.48 (ஐஎஸ்டி) மணி அளவில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

கடக லக்னத்திற்கு லக்னாதிபதியான சந்திர பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். இதனால் லக்னாதிபதி உயர்ந்த ஸ்தான பலத்தைப் பெறுகிறார் என்று கூறவேண்டும். லக்னாதிபதி பலம் பெற்றிருப்பதால் மற்ற கிரகங்களுக்கு அமைகின்ற யோகங்கள் பரிமளிக்கும் என்பது ஜோதிட விதி. லக்னத்திற்கோ அல்லது ராசிக்கோ கேந்திர தானங்களில் (1, 4, 7, 10) சுபக் கிரகங்கள் இருப்பது சிறப்பாகும். ""சந்திரமா மன5ஸோ ஜாத'' அதாவது தேவர்கள் முதலான அனைவருக்கும் மனமாக இருப்பவர் என்று வேதம் உரைக்கிறது. அதோடு அவரே தனு (உடல்) காரகருமாகிறார். அதனால் சந்திர பகவான் நம் மனித உடலையும், மனதையும் ஆட்டுவிப்பவர் என்றால் மிகையாகாது.

நவகிரகங்களில் சூரிய பகவானுக்கு அடுத்த நிலையில் இருப்பவர். சிவபெருமானின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன்; நெற்றிக்கண் செவ்வாய் பகவான் ஆவதால், எந்த ஒரு ஜாதகத்திலும் இம்மூவரின் இணைவு "திரிநேத்ர யோகம்' என்றழைக்கப்படுகிறது. பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் (கடக லக்னத்திற்கு யோக காரகர் என்கிற அந்தஸ்தில் இருப்பவர்) சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண ராசியான மேஷ ராசியை அடைகிறார். அதோடு சுக ஸ்தானத்திலமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிம்மாசன யோகமாகும்! இதனால் சந்தான (குழந்தைகள்) அபிவிருத்தி, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும், தன தானிய லாபமும், அனைத்துச் செயல்களும் விரைவாக நிறைவேறுதல் ஆகியவை உண்டாகும்.

பத்தாமதிபதி, ஒன்பதாமதிபதியின் சாரத்திலமர்வதும் தர்மகர்மாதிபதி யோகத்தின் சாயலையும் கொடுக்கிறது. வம்பு வழக்குகளிலும் எதிர்பாராத வெற்றியுண்டாகும். மனித நேயத்துடன் சமுதாயத் தொண்டுகள் செய்து, பெயர் புகழ் அடையும் யோகமுண்டாகும்! மேலும் எப்படிப்பட்ட நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றலும் துணிவும் ஏற்படும் என்றால் மிகையாகாது. ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அஷ்டம, ஆயுள், புதையல் ஸ்தானமான எட்டாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.

குரு பகவானின் ஐந்தாம் பார்வை அயன, சயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீதும் (தன காரகர் தன ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு), ஒன்பதாம் பார்வை கல்வி, சுக, வாகன, தாய் ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானின் மீதும், புத பகவானின் மீதும் படிகிறது.

பாக்கியாதிபதி, தர்மகர்மாதிபதியின் சாரத்தில் அமர்ந்து கர்மாதிபதியைப் பார்வை செய்வதால், தர்ம கர்மாதிபதி யோகத்தின் சாயலையும் காணமுடிகிறது. குரு பகவான் தன காரகராகி, புதையல்ஸ்தானத்தில் (பாக்கிய ஸ்தானத்திற்கு விரய ஸ்தானம்) அமர்ந்திருப்பதால், திடீர் அதிர்ஷ்ட யோகங்கள் உண்டாகும். குரு பகவான் தன்னம்பிக்கைக்கு ஆதாரம் கொடுப்பவர். வருமானம் ஊற்றைப்போல் பெருகிக் கொண்டிருக்கும். சொந்த வீடு, நிலம், வாகனம் இவையெல்லாம் கஷ்டப்படாமல் கிடைத்துவிடும்.

குடும்பத்தைப் பற்றி கவலைப்படாவிட்டாலும் குடும்பம் நன்றாகவே இயங்கி வரும். வெளி விவகாரங்களில் இயற்கையிலேயே நாட்டம் உண்டாகி, சமூக சேவையில் ஈடுபட்டு புகழ், கெளரவம், அந்தஸ்து ஆகியவைகளைப் பெறுவார்கள். மற்றவர்களின் கஷ்டங்களைத் தீர்த்து வைப்பதில் முன்னிற்பார்கள். அரசு ஆதரவைப் பெற்று பெரிய பதவி களில் அமர்வார்கள். குலப் பெருமையைப் பேணிக் காப்பாற்றுவார்கள். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான சிம்ம ராசியை அடைகிறார். சூரிய பகவான் பலம் பெற்றிருப்பதால் மதிப்பு மிக்க அதிகாரம் செய்யும் பதவிகள் தேடி வரும். சரியான நேரத்தில் உணவு உண்ணும் பாக்கியம் உண்டு. முதல் தர அரசுக் கிரகமாவதால் அரசு சம்பந்தமான விஷயங்களில் அதீத ஈடுபாடு உண்டாகும். அறிவு, ஆற்றல், திறமை, துணிவு ஆகியவை இயல்பாகவே அமையும். செல்வம், செல்வாக்கு இரண்டும் நல்லபடியாக உயரும். ஆரோக்கியத்திற்கு சூரிய பகவானே காரணமாவதால் உடலாரோக்கியம் மேன்மையாகவே அமைந்துவிடும். பயணம் செய்வதில் இயற்கையிலேயே ஆர்வம் உண்டு. பல நாடுகளுக்குச் சென்று வரும் பாக்கியமும் அமையும். "மக்கள் சேவையே மகேசன் சேவை' என்கிற உயர்வான எண்ணம் கொண்டவராவார் என்றால் மிகையாகாது!
Post a Comment (0)
Previous Post Next Post