தேசிய ராணுவ கல்லூரியில் பெண்கள் சேர்க்கப்படுவர்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தேசிய ராணுவ கல்லூரியில் பெண்கள் சேர்க்கப்படுவர் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் குஷ் கல்ரா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “தேசிய ராணுவ கல்லூரியில் சேர பெண்கள் விரும்புகின்றனர். ஆனால் தகுதியும் ஆர்வமும் இருந்தபோதிலும் பெண்கள் என்றகாரணத்தாலேயே அவர்களை அனுமதிப்பதில்லை. இது அவர்களது அடிப்படை உரிமையை மீறும் செயல்” என கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வுமுன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி கூறும்போது, “தேசிய ராணுவ கல்லூரியில் பெண்களை சேர்ப்பது என ராணுவ உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளதாலும் கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளதாலும் இந்த ஆண்டு பழைய நிலையே தொடரும்” என்றார். பின்னர் நீதிபதிகள் கூறும்போது, “ராணுவத்தில் பெண்களைசேர்க்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால்தான் நீதிமன்றம் தலையிடவேண்டி உள்ளது. ராணுவம் நாட்டின் மிகவும் மரியாதைக்குரிய அமைப்பு. ஆனால் பாலின சமத்துவத்தை நிலைநாட்ட மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனினும் ராணுவத்தின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றனர்.-பிடிஐ
Post a Comment (0)
Previous Post Next Post