KalviseithiDaily: Article

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Article. Show all posts
Showing posts with label Article. Show all posts

Monday, June 20, 2022

10, +2 தேர்ச்சி விகிதத்தில் வடதமிழகம் பின்னடைவு: சிறப்புத் திட்டத்துக்கு வலியுறுத்தல்

June 20, 2022 2
10, +2 தேர்ச்சி விகிதத்தில் வடதமிழகம் பின்னடைவு: சிறப்புத் திட்டத்துக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ள நிலையில், பத்தாம் வகுப்புக்கான தேர்ச்சி விகிதம் பெருமளவில் குறைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல், தேர்ச்சி விகிதத்தில் வடக்கு மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டமும் முதலிடம் பிடித்துள்ளன. அந்த மாவட்டங்களுக்கும், தேர்ச்சியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ச்சி பெற இயலாத மாணவர்கள் அதை எண்ணி கவலை கொள்ளாமல், அடுத்து வரும் துணைத் தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி பெற்று உயர்கல்வி பயில எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுத்தேர்வு முடிவுகளில் கவலையளிக்கும் அம்சம் வடக்கு மாவட்டங்களும், காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களும் தேர்ச்சி விகிகத்தில் மிகவும் பின்தங்கி இருப்பது தான். இரு தேர்வுகளிலும் வேலூர் மாவட்டம் தான் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. 12-ஆம் வகுப்பைப் பொறுத்தவரை திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகியவை தான் கடைசி 10 இடங்களைப் பிடித்த பிற மாவட்டங்கள் ஆகும். இவற்றில் திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகியவற்றைத் தவிர மற்றவை வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்கள்.

அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கடைசி 10 இடங்களைப் பிடித்த மாவட்டங்கள் பட்டியலில் திண்டுக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருவாரூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருப்பூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றில் திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருப்பூர் தவிர மீதமுள்ளவை காவிரி டெல்டா மற்றும் வடக்கு மாவட்டங்கள் என்பது வருத்தமளிக்கிறது.

கடந்த காலங்களில் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த அரியலூர், தருமபுரி, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் இந்த முறை சற்று முன்னேறியிருப்பது ஓரளவுக்கு மனநிறைவு அளிக்கிறது. ஆனாலும் கூட, அந்த மாவட்டங்கள் கல்வியில் சொல்லிக்கொள்ளும்படி வளர்ச்சியடைடவில்லை. மாறாக, புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பிறகு இப்போது தான் முதன்முறையாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த காலங்களில், கடைசி 10 இடங்களில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், ஓரிடத்தை மட்டுமே பிடித்திருந்த நிலையில், அப்போது மூன்றாக பிரிக்கப்பட்ட வேலூர் மாவட்டம் மூன்று இடங்களைக் கைப்பற்றிருப்பதால் தான் மற்ற மாவட்டங்கள் முன்னேறியிருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சியாக கருதமுடியாது.

கடந்த காலங்களில் கடைசி வரிசையில் இருந்த திருவண்ணாமலை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 7-ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. ஆனால், 12-ஆம் வகுப்புத் தேர்வில் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் 37&ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், 12-ஆம் வகுப்புத் தேர்வில் எட்டாவது இடத்தைப் பிடித்த அரியலூர் மாவட்டம் பத்தாம் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 13-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், ஒரு காலத்தில் தேர்ச்சி விகிதத்தில் முதல் 3 இடங்களில் வந்த தலைநகர் சென்னை, இப்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 26-ஆவது இடத்திற்கும், 12-ஆம் வகுப்பு தேர்ச்சியில் 18-ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பது தான். இந்த புள்ளி விவரங்கள் மீண்டும், மீண்டும் சொல்லும் உண்மை என்னவெனில், வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமெனில் அங்கு அதிரடியான மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதைத் தான்.

கல்வியில் வட மாவட்டங்கள் பின்தங்கியிருப்பது இப்போது ஏற்பட்ட சிக்கல் அல்ல. காலம் காலமாகவே அந்த மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி தான் உள்ளன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் வலியுறுத்தி வரும் போதிலும் கூட, அதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் உண்மை.

இப்போதும் கூட தமிழகத்தில் உள்ள 3800 ஓராசிரியர் பள்ளிகளில் பெரும்பாலானவை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் உள்ளன. அதனால் தான் வடமாவட்டங்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக உள்ளன என்பதை எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த சிக்கலுக்கு அரசு என்ன தீர்வை வைத்திருக்கிறது? என்ற கேள்விக்குத் தான் ஆட்சியாளர்களிடம் பதில் இல்லை.

தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களைச் சேர்ந்த 44 வட்டங்களில் கல்வி வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், வட மாவட்டங்களின் கல்வி பின்னடைவுடன் ஒப்பிடும் போது, இது யானைப் பசிக்கு சோளப்பொரியாகவே அமையும். எனவே, வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களை கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்து, அந்த மாவட்டங்களில் தொடக்கப்பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர், உயர்வகுப்புகளில் பாடத்திற்கு ஓர் ஆசிரியரை நியமித்தல், மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கூறுகளை உள்ளடக்கிய சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
Read More

Sunday, May 29, 2022

அரசுப் பள்ளிகள் மேம்பட வேண்டும்!

May 29, 2022 1
கரோனா பாதிப்பிற்குப் பின்னா், பள்ளிக் கல்வியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்து வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்த ஏழை எளிய விளிம்பு நிலை குடும்பங்களைச் சாா்ந்தவா்கள் தனியாா் பள்ளிகளில் படித்து வரும் தங்கள் குழந்தைகளை, கட்டணம் செலுத்திப் படிக்க வைக்க இயலாததால் அரசுப் பள்ளிகளில் சோ்க்கத் தொடங்கியிருக்கிறாா்கள்.

இதுவரை சற்றேக்குறைய இரண்டு லட்சம் மாணவா்கள் தனியாா் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிகளுக்கு வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்குக் காரணம், அரசுப் பள்ளிகளின் தரம் உயா்வானது என்று சொல்லி விட முடியாது. ஏனென்றால் ஏழை எளிய குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் சரிந்ததால் ஏற்பட்ட மாற்றங்கள்தான் இவைகள்.

இந்த கரோனா கொள்ளை நோய்த்தொற்று பரவத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே அதிக பாதிப்புக்குள்ளானது கல்விதான். நாடு தழுவிய அளவில் ஆரம்பக்கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை பயிலும் சுமாா் 24.7 கோடி மாணவா்களுடைய கல்வி பாதிக்கப்பட்டு அவா்களுடைய வாழ்க்கை பெரும் சவாலாக மாறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை 58,897. இதில் 35,621 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும், 9,392 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 5,788 பள்ளிகள் உயா்நிலைப் பள்ளியாகவும், 8,096 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாகவும் இருக்கின்றன.

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, 24,310 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் 7,024, 3,135 உயா்நிலைப் பள்ளிகள், 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 பள்ளிகள் இருக்கின்றன. தனியாா் பள்ளிகளைப் பொறுத்தவரை, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என்று மொத்தம் 12,382 பள்ளிகள் இருக்கின்றன.

அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று பாா்ப்போமேயானால் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி மேல்நிலைப் பள்ளிகள் வரை 8,328 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டு பள்ளிகளில் உள்ள 5.6 லட்சம் ஆசிரியா்களில் 2.27 லட்சம் போ் அரசுப் பள்ளிகளிலும், 77ஆயிரம் போ் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 2.53 லட்சம் போ் தனியாா் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனா்.

மற்ற பிரிவுகளில் 4,552 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். 37,579 பள்ளிகளில், அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியா்கள்தான் பணிபுரிகின்றனா், ஆனால், 12,382 தனியாா் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா். மாணவ, மாணவிகளைப் பொறுத்தவரை, தமிழக அரசுப் பள்ளிகளில் 45,93,422 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 22,25,308 பேரும், தனியாா் பள்ளிகளில் 64,15,398 பேரும், மற்ற பள்ளிகளில் 83,755 பேரும் படிக்கின்றனா். 35,579 பள்ளிகள் கொண்ட அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவ, மாணவிகள்தான் படிக்கின்றனா். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியாா் பள்ளிகளில் 64,15,398 மாணவ, மாணவிகள் படிக்கின்றனா்.

அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை தனியாா் பள்ளிகளின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையிலும், ஆசிரியா்களின் எண்ணிக்கையிலும் தனியாா் பள்ளிகள்தான் அதிக அளவு ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆக, அரசுப் பள்ளிகளைவிட தனியாா் பள்ளிகளை நோக்கித்தான் பெற்றோா் செல்கின்றனா் என்பது தெளிவாகிறது. அரசால் இலவச கல்வி வழங்கப்படும் நிலையிலும், பெற்றோா் பணம் கொடுத்துப் படிக்க வைக்கின்ற நிலை ஏன் உருவாகிறது என்பதை ஆராய வேண்டும்.

தமிழகத்தில் 2,500 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் கூட இல்லையென்று ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. 20 மாணவா்களுக்கு ஒரு சிறுநீா் கழிவறையும், 50 மாணவா்களுக்கு ஒரு மலக்கழிவறையும் இருக்க வேண்டும். ஆனால், இது ஏட்டளவில்தான் உள்ளது. இவற்றை சீா் செய்ய வேண்டியது அடிப்படையான ஒன்றாகும். 9-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் இடைநிற்றல் 9.6 சதவீதமாக இருக்கிறது.

ஆரம்பப் பள்ளி மாணவா்களின் இடைநிற்றல் 16 சதவீதமாக இருக்கிறது. இதன் மூலமாக குழந்தைத் தொழிலாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அரசு உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலையின்மையும், குடும்பத்தில் நிலவும் வறுமையும், பொருளாதாரச் சூழ்நிலையும் இந்தப் பிஞ்சு உள்ளங்களை நசுக்குகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளை நாடி வருகிற மாணவா்களைத் தக்க வைக்க அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதோடு, அவற்றின் கல்வித் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையைத் தக்க வைப்பதற்காகவும், மேலும் அதிகரிப்பதற்காகவும் சமூகப் பாா்வையோடும், நல்லெண்ணத்தின் அடிப்படையிலும், ஆசிரியப் பெருமக்கள் பலரும் செயல்பட்டு வருவதை நாம் நன்றியோடு நினைத்துப் பாா்க்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 37,579 பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வருடந்தோறும் ஒரு பள்ளிக்கு 10 லட்சம் வீதம் ரூ.3,758 கோடி ஒதுக்கினாலே போதும். ஐந்து வருடத்தில் தமிழகத்தில் உள்ள எல்லா அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி விடலாம். கோடிக்கணக்கான ரூபாயில் கட்டப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் வசதி படைத்தோா் பயன்படுத்துகிற நிலையில், இலவசமாகக் கல்வி கொடுக்கிற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வது என்பதே சமூக நீதிக்கான அடையாளமும் கூட.

அரசுப் பள்ளிகளில் உள்ள கட்டமைப்புகள் போதிய வசதிகளை முழுமையாக அடையாத காரணத்தினால்தான், தனியாா் பள்ளிகள்தான் தரமான பள்ளிகள் என்கிற சிந்தனை மக்களிடம் ஏற்படுகிறது. ஆகவே, அவா்கள் தங்கள் பிள்ளைகளை கடன் வாங்கியாவது தனியாா் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறாா்கள்.

முன்பு, 1:40 என்று இருந்த ஆசிரியா் -மாணவா் விகிதம் தற்போது 1:24 ஆக மாறிவிட்டது. இதற்கான காரணம், மாணவா்களின் எண்ணிக்கை குறைவுதான். மேலும் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக இரண்டு ஆசிரியா்கள் நியமிக்கப்படுகின்றனா். தலைமையாசிரியரும் ஒரு ஆசிரியரும் மட்டும்தான் பணிபுரிகிறாா்கள். தலைமையாசிரியா் அலுவலகப் பணி காரணமாக வெளியில் சென்றால், ஆசிரியா் ஒருவா் மட்டுமே மொத்த மாணவா்களையும் பாா்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. ஆக, தரமான கல்வி, குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, சுகாதாரமான சுற்றுச்சூழல், கட்டட வசதி, நூலக வசதி உள்ளிட்ட பல வசதிகளை அரசு உருவாக்க வேண்டும். பெற்றோா் - ஆசிரியா் உறவிலும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. தனியாா் பள்ளிகள் பெற்றோா்களை அழைத்தால் உடனடியாக அவா்கள் பள்ளிக்கு வந்துவிடுகிறாா்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் பெற்றோா்களை அழைத்தால் அவா்கள் வருவதில்லை. தங்களது பிள்ளைகளின் நிலையை அறிய அரசுப் பள்ளி மாணவா்களின் பெற்றோா் ஆா்வம் காட்டுவதில்லை.

மாணவா்களின் நிலையை பெற்றோரிடம் எடுத்துக் கூறுவது ஆசிரியா்களின் தலையாய கடமையாகும். இந்தப் பணி தனியாா் பள்ளிகளில் சரியாக நடைபெறுகிறது. அரசுப் பள்ளிகளில் அப்படியில்லை. பெற்றோா் பள்ளிக்கு வர முடியாது சூழ்நிலை என்றால் அவா்களுக்கு ஏற்ற நேரத்தை ஆசிரியா்கள் உருவாக்கித் தர வேண்டும்.

ஏனென்றால், நல்ல மாணவா்களை உருவாக்கும் தலையாய பொறுப்பு ஆசிரியா்களுக்கும் இருக்கிறது. இதன் மூலம் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆசிரியா்கள், மாணவா்களின் உறவு நன்றாக அமைய அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியா் - பெற்றோா் - மாணவா் நல்லுறவு மிகவும் இன்றியமையாதது.

மேலும், அரசுப் பள்ளிகளின் தரம் உயா்வதற்கு தலைமையாசிரியா், ஆசிரியா் கலந்தாய்வு மிக முக்கியமான ஒன்றாகும். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவா்களுக்கு உணவு, கூடுதலான சீருடை இவைற்றை வழங்குவதற்கு பெற்றோா் - ஆசிரியா் கழகம் முன்வர வேண்டும். அரசுப் பள்ளிகளில் தரமான கணினி ஆய்வகம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஓவியம், இசை, விளையாட்டு போன்றவற்றில் மாணவா்கள் கவனம் செலுத்தக்கூடிய வகையில் அந்தந்த துறை சாா்ந்த வல்லுநா்களை பெற்றோா் - ஆசிரியா் கழகம் நியமிக்கலாம். அரசுப் பள்ளிகளில் மாணவா்களை ஆங்கிலம் பேச வைக்க பல்வேறு திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுத்தான் வருகிறது. அவற்றை சீராக்க வேண்டும். இதில் தோ்ச்சி அடையாத மாணவா்களுக்கு கற்பிக்க அவா்களின் வகுப்பாசிரியா்களைப் பயன்படுத்தாமல், வேறு வகுப்பு ஆசிரியா்களைப் பயன்படுத்தினால் மாணவா்களிடையே கூடுதல் கவனம் ஏற்படக்கூடும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆசிரியா் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. இருக்கும் ஆசிரியா்களை பற்றாக்குறை உள்ள வேறு பள்ளிகளுக்கு நியமிக்கின்ற போக்கு நிலவுகிறது. அரசுப் பள்ளிகளில் புதிய ஆசிரியா் நியமனத்திற்கான சூழலை உருவாக்காமலே இருப்பது வருத்தத்துக்குரியது.

மாணவா்களைப் பொறுத்தவரை, பிளஸ் டூ வகுப்பு முடித்த பிறகு மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு, இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) தோ்வு இவற்றை எதிா்கொள்ளும் வகையில் அரசுப் பள்ளியின் கல்விமுறை இருந்தால் அதுவே மாணவ சமுதாயத்திற்குச் செய்கிற மகத்தான பணியாகும்.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.
Read More

Thursday, April 28, 2022

டீச்சர்.(சிறுகதை)!

April 28, 2022 0
*டீச்சர்.(சிறுகதை)*

'பேரு சொல்லுங்க!''

'கலைவாணி.''

'வயசு?''

'30.''

'ஹஸ்பெண்டு பேரு... என்ன பண்றார்?''

'இன்னும் கல்யாணம் ஆகலை.''

'நாலு வருஷத்துக்கு முன்னாடி தஞ்சாவூர்ல ஒரு பிரைவேட் ஸ்கூல்ல வொர்க் பண்ணிருக்கீங்க...''

'ஆமா.''

'ஒரு ஸ்டூடன்டைத் திட்டி, அந்தப் பொண்ணு தூக்குல தொங்கிருச்சு. உங்களை சஸ்பெண்டு பண்ணிட்டாங்க. ஆனாலும் உங்க குவாலிஃபிகேஷனும் டீச்சிங் எபிளிட்டியும்தான் திரும்பவும் உங்களுக்கு இந்த ஸ்கூல்ல போஸ்ட்டிங் கிடைச்சதுக்குக் காரணம்.''

கலைவாணி அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் சிரித்தாள். சத்தம் இல்லாத விரக்தியான சிரிப்பு. சப் இன்ஸ்பெக்டர் வினோத், அசிஸ்டென்ட் கமிஷனரையும் இன்ஸ்பெக்டரையும் பார்த்தார். அவர்கள் கலைவாணியை முறைத்தபடி இருந்தார்கள்.

'மிஸ் கலைவாணி. ப்ளஸ் ஒன் படிக்கிற பொண்ணை நீங்க அடிச்சிருக்கீங்க. அவமானம் தாங்க முடியாம, அந்தப் பொண்ணு தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு சாகக்கெடக்கிறா. ஈவ்னிங் பேப்பர்ல இதுதான் பேனர் நியூஸ். சேனல்ல செய்தி அனல் பறக்குது. நூத்துக்கணக்கான பேரன்ட்ஸ் ஸ்கூல் வாசல்ல நிக்கிறாங்க. மேலிடத்துல இருந்து நிமிஷத்துக்கு ஒரு போன். நாங்க எங்க டியூட்டில கரெக்ட்டாதான் இருக்கோம். "

'ஸாரி சார்... அந்தப் பொண்ணு நான் அடிச்சதாலதான் சூசைட் பண்ணப்போறதா முடிவு எடுத்ததா, ஏதாவது லெட்டர் எழுதி வெச்சிருக்காளா?''

'மேகநாதன்... அந்த நோட் புக் எடுங்க.''

இன்ஸ்பெக்டர் மேகநாதன் எடுத்துத் தந்த நோட்டை வாங்கி, கலைவாணியிடம் நீட்டினார். பள்ளிக்கூட நோட் அது. அவர் பிரித்துத் தந்த பக்கத்தில் பார்வையைச் செலுத்தினாள் கலைவாணி.

'கலைவாணி டீச்சர் என்னை அறைந்தது, என் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.’ மனசுக்குள் ஏதோ ஒன்று அறுந்தது கலைவாணிக்கு. ஓர் இறுக்கம் படர்ந்தது. திடுமென கருமேகங்கள் சூழ்ந்து வானம் இருட்டுவதுபோல மனதைக் கவலை கவ்வியது. ஏன் இந்த உத்தியோகம்? அப்பா, எல்லா பெண் பிள்ளைகளையும்போல என்னையும் வளர்த்திருக்கக் கூடாதா... வேறு உத்தியோகத்துக்கு அனுப்பியிருக்கக் கூடாதா?

'வாத்தியார் உத்தியோகத்தைத் தெய்வமா நெனக்கிறவன். மனசுக்கு நிறைவான தொழில். அங்கன்வாடியில டீச்சர் உத்தியோகம் வாங்கிறதுக்குப் பெரும்பாடு பட்டுட்டேன். நீ படிக்கணும்; பரீட்சை எழுதணும்; டீச்சர் ட்ரெய்னிங்ல பாஸ் பண்ணணும். மிடில் ஸ்கூல்,ஹைஸ்கூல், செகண்டரி டீச்சர்,ஹெட்மிஸஸ்னு மேல மேல போகணும். படிப்படியா மேல போனாதான், கல்வியோட மேன்மை தெரியும்; மாணவர்களின் சைக்காலஜியும் புரியும். எதிர்காலத்துல சிறந்த கல்வியாளரா வர முடியும்’ - முதல் நாள்,பள்ளிக்கூடம் போனபோது அப்பா கூறிய வார்த்தைகள் இவை.

ஆனால், அப்பா கூறியபடி கலைவாணி படிப்படியாக வளரவில்லை. மூன்று தாவல்களில்,எட்டே வருடங்களில் செகண்டரி டீச்சர். அவள் வளர்ச்சியைப் பார்க்க அப்பாவும் இல்லை;மகிழ்ந்து கொண்டாட அம்மாவும் இல்லை. அந்த வெறுமையைப் பணியில் செலுத்தினாள். கல்வியைத் தாண்டி மாணவர்கள் ஒழுக்கமாக,பண்பாக இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தாள். அந்த உணர்வுடன் மாணவர்களைச் செம்மைப்படுத்தினாள். அந்த முயற்சியில்... இது இரண்டாவது சறுக்கல்.

'சார்... இந்தத் தற்கொலை முயற்சிக்கு நான் காரணம் இல்லையே...''

'லாஜிக்கலா கரெக்ட் மேடம். ஆனா, சாயங்காலம் உங்ககிட்ட அடிவாங்கின பொண்ணு, நைட்டு தற்கொலைக்கு முயற்சி பண்றானா, அதுக்கு உங்க நடவடிக்கைதானே காரணமா இருக்க முடியும்?நீங்க அந்தப் பொண்ணை அடிச்சதை ரெண்டு ஸ்டூடன்ட்ஸ் பார்த்திருக்காங்க, சில டீச்சர்ஸும் பார்த்திருக்காங்க. ஸ்கூல்ல நாங்க நடத்தின விசாரணையில எல்லாரும் உங்களைத்தான் கை காட்டுறாங்க.'' 'உடனே என் வீட்டுக்கு ஜீப்ல வந்துட்டீங்க. 'வாங்க மேடம்’னு கட்டின புடவையோடு விசாரணைக்குக் கூட்டிட்டு வந்துட்டீங்க'' - கலைவாணி அடக்க முடியாமல் அழுதாள்... விசும்பியபடியே பேசினாள்.

'சார்... போன வாரம்தான் எங்க தெருவுல இருக்கிற ஒரு வீட்டுல போலீஸ் புகுந்து மூணு பொண்ணுங்களை அழைச்சுட்டுப் போனாங்க. இன்னைக்கு நீங்க இப்படி காக்கிச் சட்டையோடு என் வீட்டுக்கு வந்ததைப் பார்த்தவங்க, தனியா இருக்கிற என்னைப் பத்தி தப்பா நினைக்கலாம் இல்லையா?''

ஏ.சி சில விநாடிகள் தடுமாறினார். சப் இன்ஸ்பெக்டர் வினோத்தைப் பார்த்தார். அவர் தலைகுனிந்தார்.

'அதைவிடுங்க மிஸ் கலைவாணி. நாம விசாரணைக்கு வருவோம். ஏன் அந்தப் பொண்ண அடிச்சீங்க?''

'ஹோம்வொர்க் பண்ணலை. காரணம் கேட்டதுக்கு ஒழுங்கா பதில் இல்லை. எதிர்த்துப் பேசினா...''

'அதுக்கு கிளாஸ் ரூம்ல கண்டிக்காம, ஸ்கூல் விட்டதும் கிளாஸ் ரூமுக்கு வெளியே வெச்சு ஏன் அடிச்சீங்க?''

'சார்.... 'அடிச்சீங்க... அடிச்சீங்க...’னு திரும்பத் திரும்ப அந்த வார்த்தையை யூஸ் பண்ணாதீங்க. நீங்க கேக்கிற விதத்தைப் பார்த்தா, நான் ஏதோ திட்டம்போட்டு உள்நோக்கத்தோடு அவளை அடிச்சது மாதிரி இருக்கு. ஒரு கிளாஸ் டீச்சருக்கு ஸ்டூடன்ட் மேல எல்லாவிதமான உரிமையும் இருக்கு.

காலையில ஏழு மணிக்கு ஸ்கூலுக்கு வந்துட்டு புள்ளைங்க வீட்டுக்குப் போன பிறகுதான் நாங்க கிளம்புறோம். டீச்சிங்கைத் தாண்டி ஏகப்பட்ட வேலைகள் எங்களுக்கு இருக்கு. 'ஏன் ஹோம்வொர்க் பண்ணலை?’னு கேக்கிற உரிமை ஒரு டீச்சருக்கு இல்லையா?

நான் ஸ்கூல் கவுன்சலிங் போர்டுல மெம்பர். ஒரு நாளைக்கு எத்தனை புகார்கள் வருது தெரியுமா?ஸ்டூடன்ட்ஸ் என்ன மாதிரி பிரச்னையை எல்லாம் ஃபேஸ் பண்றாங்க... கிளாஸ் ரூம்ல என்ன நடக்குதுனு உங்களுக்குத் தெரியாது. ஸ்கூல்ல நாங்க கொடுக்கிற கவுன்சலிங்ல, புள்ளைங்க மேல பெர்சனலா காட்டுற அக்கறையாலதான் இன்னைக்கு பல பேரன்ட்ஸ் நிம்மதியா இருக்காங்க. டீச்சர்ஸ் அவங்க வேலையை மட்டும் பார்த்துட்டு இருந்தா, தினமும் ஒரு ஸ்டூடன்ட் தற்கொலைக்கு முயற்சி பண்ணுவாங்க. விவரம் தெரியாம அவங்களே உருவாக்கிக்கிற பிரச்னைகள்ல மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. உங்களுக்கு டென்த், ப்ளஸ் டூ படிக்கிற புள்ளையோ, பொண்ணோ இருந்தா கூப்பிட்டுப் பக்கத்துல உக்காரவெச்சு 'இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்தது!’னு நட்பா கேளுங்க. அது சொல்லும்.''

சப் இன்ஸ்பெக்டர் வினோத் அழுத்தமான குரலோடு குறுக்கிட்டார். 'மேடம், எங்களுக்கு உங்க அட்வைஸ் தேவை இல்லை. உங்க செய்கைக்குத் தனிப்பட்ட விரோதம் ஏதாவது இருக்காங்கிறதுதான் எங்க விசாரணையின் நோக்கம். பள்ளிக்கு உள்ள நடக்கிற பிரச்னைகளோட பின்னணி பத்தி பலவிதமா யூகிச்சு விசாரிக்கவேண்டிய சூழ்நிலை.'' 'அப்படி எதுவும் இல்லை. ப்ளஸ் ஒன் படிக்கிற பொண்ணோடு சப்ஜெக்ட் தாண்டி வேற பேசவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.''

'அப்படியா? நேத்து ராத்திரி பத்தே கால் மணிக்கு பிரியாகூட செல்போன்ல நாலு நிமிஷம் பேசி இருக்கீங்களே... என்ன பேசினீங்க?''

கலைவாணி நிலைகுலைந்தாள்.

'உங்களுக்குப் பிடிக்காத ஸ்டூடன்ட்ஸ் மொபைல் நம்பர் வாங்கிட்டு, அவங்களை ராத்திரி நேரத்துல கூப்பிட்டுத் திட்டுவீங்கனு உங்ககூட வேலைபார்க்கிற சில டீச்சர்ஸ் எங்க விசாரணையில சொன்னாங்களே... அது உண்மையா?''

கலைவாணி வெற்றுப்பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

'பதில் சொல்லுங்க மேடம்.

தஞ்சாவூர் ஸ்கூல்ல நடந்த சம்பவத்துக்குப் பிறகு ஸ்டூடன்ட்ஸ்கிட்ட மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கலாமே... ஏன் உங்களை மாத்திக்கலை?''

'என்னை மாத்திக்கணும்னு நான் நினைக்கிற அளவுக்கு என்கிட்ட தவறு இல்லை. என்கிட்ட படிக்கிற ஸ்டூடன்ட்ஸ் மேல எனக்கு அபரிமிதமான அன்பும் அக்கறையும் உண்டு. அவங்களை நல்லா கொண்டுவரணும்னு நினக்கிறப்ப, சில சமயம் இதுமாதிரி நடந்திடுது.''

'அடிச்சு அவமானப்படுத்தித் தற்கொலைக்குத் தூண்டுறதா? அந்தப் பொண்ணு செத்துப்போனா,உங்க மேல சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டி வரும்.''

'அப்படி நடந்தா பார்க்கலாம் சார்.''

ஏ.சி பேசினார்... 'கலைவாணி... இது சென்சிட்டிவான கேஸ். ஒரு பக்கம் அந்தப் பெண்ணோட பேரன்ட்ஸ்; இன்னொரு பக்கம் எங்க ஹையர் ஆபீஸர்ஸ். பிரச்னையோட தீவிரத்தை உணர்ந்துதான் நான் இங்க வந்திருக்கேன். கடந்த நாலு மணி நேரமா எல்லா டி.வி-லயும் இந்த செய்திதான். நாளைக்கு நியூஸ் பேப்பர்ஸ், வாரப் பத்திரிகைகள் எல்லாம் இதைக் கையில எடுத்திடும். அந்தப் பொண்ணு நல்லபடியா வீடு திரும்பிட்டா, உங்க எதிர்காலத்துக்கு நல்லது. கடவுளை வேண்டிக்கங்க...''

ஏ.சி செல் ஒலித்தது. எடுத்துப் பேசியவர் முகம் மாறியது. லைனை கட் செய்துவிட்டு கண்களை மூடிக்கொண்டார். 'என்ன சார்?'' - இன்ஸ்பெக்டர் கேட்டார்.



'அந்தப் பொண்ணு செத்துட்டா.''

கலைவாணிக்கு உடம்பு நடுங்கியது. மயக்கம் வருவதுபோல இருந்தது. பிரியாவின் துறுதுறு முகமும், வகுப்பில் அவள் முதல் பெஞ்சில் அமர்ந்து பாடம் கேட்கும் விதமும் மனதில் ஓடின.

'சார், பேரன்ட்ஸ்க்குத் தெரியுமா?''

'எல்லாரும் ஆஸ்பத்திரிலதான் இருக்காங்க...''

அவர் அப்படிக் கூறி முடித்த அடுத்த விநாடி... போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வாகன இரைச்சல்.

சாதிக் கட்சி கொடியோடு ஏராளமான வாகனங்கள் வந்து நின்றன. தபதபவென ஆட்கள் ஆவேசமாக இறங்கினார்கள். படார் படாரெனக் கதவுகள் சாத்தப்படும் சத்தம். பத்து, இருபது, முப்பது பேர் இருப்பார்கள்.

'ஏய் வாத்திச்சி... வெளியே வாடி!''

'எதுக்கு அவளைக் கூப்பிடுற... உள்ள புகுந்து தூக்குங்கடா அவளை..!'' - ஒரு குரல் கட்டளையிட, அதை ஏற்றுக்கொண்டு ஆவேசக் கூச்சலோடு கும்பல் முன்னேறியது; போலீஸ் ஸ்டேஷனைச் சூழ்ந்தது. காதைப் பொசுக்கும் ஆபாச வார்த்தைகள் வீசப்பட்டன. பெண் காவலர்கள் பதற்றமாக ஏ.சி-யைப் பார்த்தார்கள். ஏ.சி., சேரில் இருந்து எழுந்தார். 'கலைவாணி... நீங்க உள்ள போங்க.''

கலைவாணி தயக்கமாக நிற்க... அந்தப் பெண் காவலாளி, கலைவாணியின் கையைப் பிடித்து அறைக்குள் அழைத்துச் சென்றார்.

ஏ.சி., இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மூவரும் வெளியே வந்து, ஸ்டேஷன் வாசலை மறைத்து நின்றனர்.

'எங்க புள்ளயை அநியாயமா கொன்னுட்டா அந்த வாத்திச்சி. அவளை வெளியே அனுப்புங்க'' -முன்னேறிய கூட்டம், ஏ.சி-யைப் பார்த்ததும் பின்வாங்கியது.

ஏ.சி குரல் உயர்த்தினார். 'போலீஸ் ஸ்டேஷன்ல கலாட்டா பண்ணக் கூடாது. கலைஞ்சு போயிடுங்க. நாங்க விசாரிச்சுட்டு இருக்கோம். சட்டப்படி என்ன செய்யணுமோ, அதைச் செய்வோம். என்ன சம்பந்தம், கூட்டம் சேர்த்துக்கிட்டு போலீஸ் ஸ்டேஷனை கேரோ பண்றீங்களா? விளைவு மோசமா இருக்கும்'' -கூட்டத்தின் முன்னால் நின்ற அறிமுகமான ஒரு பிரமுகரை ஏ.சி அதட்டினார். அவர் நெளிந்தார்.

'மேகநாதன்... செல்போன்ல இந்தக் கூட்டத்தை போட்டோ எடுங்க.''

ஒருவரையொருவர் பார்த்தபடி பின்வாங்கினார்கள்.

கான்ஸ்டபிள்கள், அருகில் இருக்கும் ஸ்டேஷனுக்கு நிலைமையைப் பகிர்ந்தார்கள். மைக்கில் டி.சி ஆபீஸுக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் போனது. போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பைக் கூட்டத்தினர் உணர்ந்து, நிதானத்துக்கு வந்தார்கள்.

சாதிக் கட்சிக் கரை வேட்டி அணிந்து தோளில் தளரத் தளரத் துண்டு போட்டிருந்த அவர்,வாய்விட்டு அழுதவாறு பேசினார். 'ஒரே பொண்ணு சார். அநியாயமா பறிக்கொடுத்துட்டோம். பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டிய டீச்சர், ஏன் சார் கை நீட்டணும்? நல்லதா நாலு விஷயங்கள் கத்துக்கிட்டு வருவாங்கனுதானே பள்ளிக்கூடம் அனுப்புறோம். அடிச்சு அவமானப்படுத்தவா அனுப்புறோம்? நானோ என் பொண்டாட்டியோ ஒரு வார்த்தைக்கூட பிரியாவைக் கண்டிச்சது இல்லை. கேட்டதை வாங்கிக் கொடுத்திருவோம். அப்படி ஒரு செல்லம் சார். என் குடும்பத்துக் குலவிளக்கு. தவம் இருந்து பெத்த புள்ள. அவளை அநியாயமா சாகக் கொடுத்துட்டு நிக்கிறோம். கல்யாணமாகி, குழந்தை... குட்டினு இருந்தா அந்த வாத்திச்சிக்குப் புள்ளைங்க அருமை தெரியும். அவளை விட மாட்டேன் சார். எவ்வளவு நேரம் உள்ளே வெச்சிருப்பீங்க? எத்தனை நாளைக்கு போலீஸ் காபந்து கொடுப்பீங்க... பார்த்திடலாம்.''

ஆவேசமாக வந்த வாகனங்களில் திரும்பி ஏறினார்கள். வாகனங்கள் நகர்ந்தன.

ஏ.சி., டி.சி-யைத் தொடர்புகொண்டார். நிலைமையை விளக்கினார். அவர் நிதானமாகப் பேசினார். 'பொண்ணு பாடி போஸ்ட்மார்ட்டத்துக்குப் போயிருச்சு. சூசைட் நோட் தெளிவா இல்லை. டீச்சர் அடிச்சிட்டாங்கனுதான் இருக்கு. செல்போன்ல பேசினதுக்கு ரெக்கார்ட்ஸ் கிடையாது. சிக்கலான கேஸ். மேலிடத்துலேர்ந்து தெளிவான இன்ஸ்ட்ரக்ஷன் வர்ற வரைக்கும் அவசரப்பட்டு நாமளா ஏதும் செய்ய வேணாம். ஜே.சி-யும் அதைத்தான் ஃபீல் பண்றார்.''

'டீச்சருக்குப் பந்தோபஸ்து வேணும் சார். த்ரெட்டன் இருக்கு. அவங்க வெளியே போனா ஆபத்து.''

'நானும் மைக்ல கேட்டேன். ஸ்டேஷன்ல வெச்சுக்காதீங்க. சேஃப்ட்டியா வீட்டுக்கு அனுப்பி பந்தோபஸ்து போட்டுருங்க. ஒரு ஸ்டேட்மென்ட் வாங்கிக்கங்க.''

'ஓ.கே சார்.''

ஏ.சி., இன்ஸ்பெக்டரையும் சப் இன்ஸ்பெக்டரையும் அழைத்தார்.

வினோத் உள்ளே வந்தபோது, கலைவாணி மேஜையில் தலை கவிழ்ந்து அழுதுகொண்டிருந்தாள். சில விநாடிகள் தயக்கமாக நின்றிருந்தார். 'மேடம், ஒரு ஸ்டேட்மென்ட் எழுதிக் கொடுத்திட்டு நீங்க வீட்டுக்குப் போகலாம். உங்களுக்குப் பந்தோபஸ்து கொடுக்கச் சொல்லி, எங்களுக்கு உத்தரவு. அடுத்து என்ன பண்றதுனு காலையிலதான் மேடம் தெரியும்.''

கலைவாணி, விரக்தியாகச் சிரித்தாள்.

'மனசு நொறுங்கிருச்சு சார். ஸ்டூடன்ட்டோட சைக்காலஜி தெரிஞ்சவங்கிற கர்வம் எனக்கு உண்டு. அதுக்கு மரண அடி விழுந்திருக்கு. ஸ்டூடன்ட்ஸ் எல்லாரும் என்னை மாதிரி இருக்கணும்னு எதிர்பார்க்கிறேன். அது தப்புனு புரியுது.

சந்தோஷமா ஈடுபாட்டோடு வேலைபார்த்தேன். ஆனா, இப்ப என்னவோ தெரியல. மனசுக்குள்ள வெறுப்பு வந்துருச்சு.''

வினோத், கலைவாணியைப் பார்த்தபடி பேப்பர் எடுத்துக் கொடுத்தார்.

வளையலை மேலே தள்ளி, கையோடு இறுக்கிக்கொண்டாள். மேஜையில் இருந்து பேனா எடுத்தாள்... யோசித்தாள். தெளிவான கையெழுத்தில் எழுதத் தொடங்கினாள்.

ஏட்டு, எஸ்.ஐ பக்கத்தில் வந்தார்.

'சார்... டீச்சரம்மா எழுதித் தர்றபடி தரட்டும். நாம ஸ்டேஷன் டைரியில ஸ்டேட்மென்ட் எழுதணும். அந்தப் பாப்பா என்ன சார் குடிச்சது? விஷமா இல்லை... தூக்க மாத்திரையா? விவரம் வேணும் சார்.''

'கேட்டுச் சொல்றேன். ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வந்துருவோமா?'' வினோத், செல்போனில் நம்பர் போட்டார். கன்ட்ரோல் ரூமைப் பிடித்தார். 'ஸ்கூல் பொண்ணு சூசைட் கேஸ். போஸ்ட்மார்ட்டம் இன்சார்ஜ் யாரு?டாக்டர் சங்கரா... மைக்கேலா?''

'மைக்கேல் சார்.''

'டாக்டர் மைக்கேலை எனக்குத் தெரியும்'' - நம்பர் போட்டார்.

'சார்... நான் விருகம்பாக்கம் எஸ்.ஐ வினோத் பேசுறேன். திருவல்லிக்கேணியில இருந்தப்ப உங்களைச் சந்திச்சிருக்கேன்.''

'தெரியும் வினோத்... சொல்லுங்க.''

'சார்... அந்த ஸ்கூல் பொண்ணு போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சிட்டா?''

'இப்பதான் முடிச்சேன். வினோத்... அந்தப் பொண்ணு கர்ப்பம்.''

'சார்... என்ன சொல்றீங்க?''

கலைவாணி, நிமிர்ந்து வினோத்தைப் பார்த்தாள். 'மேடம்... அந்தப் பொண்ணு கர்ப்பமாம்.''

கலைவாணி முகம் பேய் அறைந்ததுபோல் ஆனது.

'வாட்... சார், நான் டாக்டர்கிட்ட பேசலாமா... ப்ளீஸ்..!''

வினோத் என்ன சொல்வது எனப் புரியாமல் செல்போனை கலைவாணியிடம் கொடுத்தார்.

'சார்... நான் அந்தப் பொண்ணு பிரியாவோட டீச்சர் கலைவாணி பேசுறேன். போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கேன். நான் அடிச்சதாலதான் சூசைட் பண்ணிக்கிட்டதா...''

'தெரியும் மேடம். நீங்க தப்பிச்சுட்டீங்க. 'மேட்டர் தெரிஞ்சு கண்டிச்சேன்’னு சொல்லிடுங்க. உங்களுக்கு இனிமே பிரச்னை வராது. பொண்ணு எவன்கூடவோ அத்துமீறி பழகி...''

'தெரியும் சார். 'ரெண்டு மாசத்துக்கு முந்தி கிளாஸை கட் பண்ணிட்டு, கூடப் படிக்கிற பையன்கூட மகாபலிபுரம் வரைக்கும் போனேன். அங்க அவன் என்னை செல்போன்ல படம் எடுத்துட்டான். அதைக் காட்டி 'ஜாலியா இருக்கலாம் வா’னு அடிக்கடி மிரட்டுறான். எனக்குப் பயமா இருக்கு. ஹெல்ப் பண்ணுங்க மேடம்’னு அழுதா. கோபத்துல நான் அவளை அடிச்சேன்; அந்தப் பையனோட அப்பா சாதி கட்சி பேக்ரவுண்டு உள்ளவர். பொண்ணோட ஃபேமிலியும் அப்படித்தான். நான் அந்தப் பையனைக் கண்டிச்சு செல்போன்ல இருக்கிற படத்தை அழிச்சுட்டு, பிரச்னை வெளியே போகாம,யாருக்கும் தெரியாம முடிக்கணும்னு நினைச்சேன். அந்தப் பையன்கிட்டேயும் பேசிட்டேன். அவனும் ஸாரி கேட்டுட்டு 'டெலிட் பண்றேன்’னு சொல்லிட்டான். இதை பிரியாகிட்ட சொல்லி, 'பயப்படாத நான் பார்த்துக்கிறேன்’னு செல்போன்லயே அவளுக்கு கவுன்சலிங் கொடுத்தேன். ஆனாலும் பயந்துட்டா... அவசரப்பட்டு தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுட்டா.

சார்... உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன். ப்ளஸ் ஒன் படிக்கிற பொண்ணு. கூடப் படிக்கிற பையன்கூடப் பழகி கர்ப்பமாயிட்டானு தெரிஞ்சா,அவங்க பேரன்ட்ஸ், மத்த பேரன்ட்ஸ் எல்லாருக்கும் அதிர்ச்சியா இருக்கும். போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து என்னை அடிக்கணும்னு நெனக்கிறவங்களுக்குப் பையனோட பேக்ரவுண்டு தெரிஞ்சா, பெரிய விபரீதம் ஆயிரும்; ஸ்கூல் பேரும் கெடும். இதை நம்மளோட முடிச்சுப்போம் டாக்டர்.''

'என்னது நம்மளோட முடிச்சுப்போமா?விளையாடுறீங்களா? ரிஸ்க் மேடம். அதோட இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வெளியே போனாத்தான் உங்களுக்குப் பாதுகாப்பு. இல்லைனா நீங்க ஆயுள் முழுக்க போலீஸ் பாதுகாப்போடதான் இருக்கணும்.'' 'பரவாயில்லை. அதை நான் சமாளிச்சுக்கிறேன். கர்ப்பம்னு நீங்க குறிப்பிட்டு அந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வெளியே வந்தா,அதனால ஏற்படப்போறது... பெரிய சமூக இழப்பு. நிச்சயம் இஷ்யூ ஆகும். ரெண்டு பக்கமும் பகை ஏற்படும். சாதிக் கலவரம் உண்டாகும். பிரியா தொடர்புடைய வீடியோ படங்கள் அந்தப் பையன்கிட்ட இருந்தா, அது வெளியே வரலாம். அவங்க பேரன்ட்ஸுக்கு அது காலம் காலமா அழிக்க முடியாத அவமானம். பெத்த பொண்ணை அநியாயமா அள்ளிக் கொடுத்தவங்களுக்கு வேற எந்த அதிர்ச்சியும் வேணாம் சார்... ப்ளீஸ். எல்லா நேரங்கள்லயும் ரூல்ஸ் பார்க்க முடியாது. சில நேரங்கள்ல விதிமுறை, சட்டம் இதெல்லாம் தாண்டி சுதந்திரமா சிந்திக்கணும்;முடிவெடுக்கணும்; செயல்படணும்.''

மறுமுனை அமைதியாக இருந்தது.

'சார்... இதே மாதிரி ஒரு சூழ்நிலையை நாலு வருஷத்துக்கு முன்னாடி தஞ்சாவூர்ல ஃபேஸ் பண்ணியிருக்கேன். அப்ப டாக்டரும் போலீஸும் ஒத்துழைச்சாங்க. அப்புறம் உங்க இஷ்டம்...''

கலைவாணி, செல்போனை வினோத்திடம் நீட்டினாள்.

சப் இன்ஸ்பெக்டர் வினோத் அதிர்ந்துபோய் கலைவாணியைப் பார்த்தபடியே இருந்தார்.

அதிகாலையில் அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு கலைவாணி கண்விழித்தாள். எழுந்து முகம் துடைத்துக்கொண்டு தயக்கமாக வாசல் கதவைத் திறந்தாள்.

நடுத்தர வயதில் அந்தத் தம்பதியினர் நின்றிருந்தார்கள். கையில் மல்லிகைப் பூப்பந்து. அவளைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தார்கள்.

கலைவாணி குழப்பமாக 'யார் நீங்க? என்ன வேணும்?’ எனக் கேட்க முற்படும்போது ஆட்டோவில் இருந்து வேஷ்டி சட்டை அணிந்து சப் இன்ஸ்பெக்டர் வினோத் இறங்கிக் கொண்டிருந்தார்!

*பின் குறிப்பு:* கலைவாணிகள் சிலரும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்- பல்வேறு துறைகளிலும். ஆனால், களவாணிகளின் கதைகள்தான் ஊடகங்களில் ஊறி நாறிப் பரவுகிறது. எனவே, கலைவாணிகளைக் கண்டு பாராட்டவேண்டும்.

*இந்த கதையை எதார்த்தமாகச் சொன்ன திருவாரூர் பாபுவுக்கு பாராட்டுகள்.*💐

*விகடனுக்கு நன்றி.🙏🏻*
Read More

Sunday, April 24, 2022

மாணவர்களை நல்வழியில் திருத்த வேண்டியது ஆசிரியர்களா? அரசா?? பெற்றோர்களா???

April 24, 2022 0
ஓர் ஆசிரியராகவும் கவிஞராகவும் இந்தப் பதிவை எழுத வருத்தப்படுகிறேன்.சமீப காலமாக அரசுப்பள்ளிகளில் சில மாணவர்கள், பள்ளி வளாகத்திலும், வகுப்பறைகளிலும் ஆசிரியர்களிடமும் நடந்து கொள்ளும்விதம் மிகுந்த கவலைக்கு உரியது. ஆசிரியர்களை மாணவர்கள் இழிவாகப் பேசுகின்ற, தாக்க முனைகின்ற வீடியோக்கள் ஊடகங்களில் சுற்றுகின்றன. அவை பெரும்பாலும் மாணவர்களால் எடுக்கப்பட்டு அவர்களாலேயே இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் பகிரப்படுகின்றன.

மேலும் பாடம் நடத்தும்போது பெண் ஆசிரியர்களை வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவிடுகிறார்கள்.உண்மையில் இவை போன்ற நிகழ்வுகள் தினம்தினம் பள்ளிகளில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.அவை வெளியே தெரிவதில்லை. ஆசிரியர்கள் மென்மையாக அறிவுரைகூறி கடக்க வேண்டிய நிர்பந்தம்.

. பெண் ஆசிரியர்கள் எப்போதும் ஒரு அச்ச உணர்வுடனோ ஜாக்கிரதை உணர்வுடனோ பாடம் நடத்த வேண்டியிருக்கிறது. அது எப்படிப்பட்ட மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் பெண் ஆசிரியர்களை உள்ளாக்குகிறது? சில கேள்விகள் நமக்கு எழுகின்றன. 1.கொரோனா காலச்சூழல்தான் காரணம் என்றால் தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் இவைபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றனவா? நடந்தால் அவை ஏன் வெளியே தெரிவதில்லை?

2.கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் காரணம் என்றால் அவற்றைத் தடுப்பதற்காக மிகத்தீவிரமாக அரசு நடவடிக்கை எடுக்கிறதா?

3.மாணவர்களிடம் அன்பாகச் சொல்ல வேண்டும், உரையாட வேண்டும் என்று சொல்லும் சமூகத்தின் அறிவுரைகளைப் ஆசிரியர்கள் பின்பற்றிக் கொண்டிருப்பதற்குப் பின்பும் இப்படி நடந்து கொள்ளும் மாணவர்களை என்ன செய்வது?

4. ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என ஆசிரியர்களும் கல்வியாளர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.அரசு ஏன் இதில் ஆர்வம் காட்டுவதில்லை?

5.வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை ஆசிரியர்கள்தான் இரண்டாம் தாயாக இருந்து திருத்த வேண்டும் என்று கல்வி அமைச்சர் இன்று தெரிவித்திருக்கிறார்.இது நடைமுறையில் சாத்தியமா?



6. மாணவர்களின் ஒழுங்கீனச் செயல்களுக்குப் பெற்றோர், சமூகம்,அரசு போன்றவற்றின் கூட்டுப் பொறுப்பினைப் புறந்தள்ளி, எல்லாவற்றிற்கும் ஆசிரியர்களைப் பொறுப்பாக்குவது சரிதானா?



7.பள்ளிக்கு ஏன் வரவில்லை, ஏன் படிக்கவில்லை, ஏன் சீருடை அணியவில்லை, ஏன் முடிவெட்டவில்லை,ஏன் எழுதவில்லை, ஏன் ரெகார்ட் நோட்டு வைக்கவில்லை, ஏன் தாமதமாக வருகிறாய் என எதையும் மாணவர்களிடம் கேட்காமல், நூறு சதவீத தேர்ச்சியைத் தந்தே ஆகவேண்டும், நூறு சதவீதம் மாணவர்களின் வருகை இருந்தே ஆக வேண்டும் என்று ஆசிரியர்களை கடுமையாக வருத்துவது எதனால்? 8. வகுப்பறையில் ஆசிரியர்களிடமோ, ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது ஒழுங்கீனமான செயல்களின் ஈடுபடும் மாணவர்களால் அந்த வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களின் கற்றலுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதை மற்ற மாணவர்களும் அவர்களிடம் கேட்க முடியாது. கேட்டால் அடிப்பார்கள் என்று அமைதியாக இருந்து விடுகிறார்கள். ஆசிரியர்களையும் ஆபாச சொற்களால் பேசுகின்றனர். இதற்கு சஸ்பெண்ட் செய்வது மட்டும் தீர்வாகுமா?

9'.நாங்கள் சொன்னால் ஜட்ஜே நம்புவார்' என்பதைப்போல நாங்கள் என்ன செய்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்னும் எண்ணத்தை மாணவர்களிடம் விதைத்தது எது? இதிலிருந்து எப்படி மீட்டெடுப்பது?

10.அலைபேசியை மாணவர்கள் பள்ளிக்குக் கொண்டுவரக் கூடாது என்றால் அலைபேசியை கொண்டுவரும் மாணவர்களை என்ன செய்வது?ஆசிரியர்கள் மாணவர்களைப் பரிசோதிக்கக் கூடாது, ஏன் கொண்டு வந்தாய் எனக் கேட்கக்கூடாது என மேலிடத்து அறிவிக்கப்படாத உத்தரவு. இந்தச் சூழலில் ஆசிரியர்கள் என்ன முடிவு எடுப்பது?

11.மாணவர்களை ஏதாவது கேட்டு, விபரீதமாக ஏதாவது நடந்துவிட்டால் அந்த ஆசிரியரே முழுப் பொறுப்பு. எந்த அதிகாரியும் ஆசிரியர்கள் பக்க நியாயத்தை உணராதது ஏன்?

12.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளைப் பிரித்து ,கல்லூரிகளில் இணைத்து ஜூனியர் காலேஜ் என்று ஒன்றை ஏன் கொண்டுவரக் கூடாது? 13.தமிழகத்தில் உள்ள துவக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும்,உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுகின்றன. அப்படி இருந்தும் மாணவர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் மேல்நிலைப் பள்ளிகளை இரண்டாகப் பிரித்தால் நலமாக இருக்கும். இதை அரசு முன்னெடுக்குமா?

14. ஓர் ஆசிரியருக்கு நாற்பது மாணவர்கள் என்றால்தான் கற்பித்தல் கற்பித்தல் சரியாக நடக்கும்.ஆனால் அரசுப் பள்ளிகளில் சுமார் அறுபது, எழுபது மாணவர்கள் இருக்கிறார்கள்.எனவே 1:40 என்ற விகிதத்தில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

15.இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், கல்வித் தரத்தை உயர்த்த அரசு கொண்டு வரும் திட்டங்கள் எவையும் சிறப்பான பலன் தரா.

16.கொரோனா காலத்தில் எல்லா மாணவர்களுக்கும்தானே கற்றல் இடைவெளி ஏற்பட்டது? இல்லம்தேடி கல்வி ஏன் எட்டாம் வகுப்புவரை மட்டுமே கொண்டுவரப் பட்டுள்ளது? ஒன்பது முதல் பன்னிரண்டு வகுப்புவரை இதை நீட்டிக்கவில்லை?

மாணவர்கள் வயது அப்படி. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.ஆசிரியர்கள்தான் அவர்களைத் திருத்த வேண்டும் என்று சொல்பவர்கள், உங்கள் பிள்ளைகளை அதே அன்புடன் பேசி திருத்த உங்களுக்கும் பொறுப்பு உண்டு என்பதை மறக்க வேண்டாம்.

---- சுகிர்தராணி,

அரசுப் பள்ளி ஆசிரியை.
Read More

Friday, April 22, 2022

இன்ஜினியரிங் படித்தவர்கள் சாணி அள்ளுவரா?

April 22, 2022 0
''மேயருக்காக, பெருமாளையே, 'யூ டர்ன்' அடிக்க வச்சிட்டாவ வே...'' என்றபடியே, டீயை ஒரு மடக்கு குடித்தார், அண்ணாச்சி.

''எந்த ஊர்ல ஓய் இந்த அநியாயம்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''மதுரை சித்திரை திருவிழாவுல, அழகர் ஆத்துல இறங்குறதுக்கு முந்தின நாள், அரசு அலுவலகங்களின் மண்டகப்படிக்கு போய் ஆசிர்வதிப்பது வழக்கம்... ''அந்த வகையில, மாநகராட்சி அலுவலகத்துக்கு போன கள்ளழகருக்கு கமிஷனர் உள்ளிட்டோர் எதிர்சேவை செஞ்சாவ... சுவாமி புறப்பட்டு போனதும், தி.மு.க.,வினரும், மாநகராட்சி அதிகாரிகளும் ஓடி வந்து, சுவாமி வாகனத்தை வழிமறிச்சாவ வே... ''அப்ப, 'மேயர் இந்திராணியம்மா இப்ப தான் வந்தாங்க... சுவாமி ஆசிர்வாதம் வாங்கணும்... திரும்ப மாநகராட்சி ஆபீசுக்கு வாங்க'ன்னு மிரட்டும் தொனியில சொன்னாவ வே... ''எதுக்கு வம்புன்னு அறநிலையத் துறையினர், மாநகராட்சி அலுவலகத்துக்கு மறுபடியும் சுவாமியை அழைச்சிட்டு போனாவ... இதனால, தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு அழகர் வர, 45 நிமிஷம் லேட்டாயிட்டு வே...'' என்றார், அண்ணாச்சி. ''பக்தின்னு வந்துட்டா தி.மு.க.,காராளை அடிச்சிக்க முடியாது ஓய்...'' என்ற குப்பண்ணாவே அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார்... ''அரசு பள்ளிகள்ல ஒரு வாரத்துல டீச்சர்ஸ் நடத்தற பாடங்களுக்கான திட்டமிடலை, 'நோட்ஸ் ஆப் லெசன்'னு சொல்வா... சில மாவட்டங்கள்ல, 'லெசன் பிளான்'னும் சொல்வா... ஆனா, ரெண்டுக்கும் வேற வேற அர்த்தம்னு கல்வி அதிகாரிகள் இப்ப, 'கண்டுபிடிச்சு' இருக்கா ஓய்...

''அதாவது ஒரு வாரத்துக்கான திட்டமிடலை, 'நோட்ஸ் ஆப் லெசன்'னும், தினசரி திட்டமிடலை, 'லெசன் பிளான்'னும் சொல்லி, ரெண்டு தனித்தனி கோப்புகளை தயாரிக்க சொல்றாளாம்... அது மட்டுமில்லாம, என்ன பாடம் நடத்தினோம் என்பதை, 'ஒர்க் டர்ன்' என்ற பெயர்ல, தனி கோப்பா குடுக்க சொல்றா ஓய்... ''ஏற்கனவே, 60க்கும் அதிகமான பதிவேடுகளை பராமரிக்கறதால, 'பாடம் நடத்தவே நேரம் இல்லாத சூழல்ல, இன்னும் மூணு கோப்புகளை தயாரிக்க சொல்லி, 'கிளர்க்' வேலை பார்க்க சொல்றாளே'ன்னு டீச்சர்ஸ் எல்லாம் வருத்தப்படறா ஓய்...'' என்றார் குப்பண்ணா. ''யாரால என்ன வேலை செய்ய முடியும்னு தெரிஞ்சு குடுக்கணும்... இன்ஜினியரிங் படிச்சவங்க சாணி அள்ளுவாங்களா...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''விபரமா சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''கால்நடை துறையில, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு ஆள் எடுக்கிறாங்க... மாசம் 19 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவாங்க... ''கால்நடை மருத்துவமனையை சுத்தமா வச்சுக்கணும்... மாடு சாணி போட்டா அள்ளணும்... சைக்கிள் ஓட்ட தெரியணும்... 10வது, 'பெயில்' தான் கல்வி தகுதி... ஆனா, இன்ஜினியரிங் படிச்சவங்களும் விண்ணப்பிக்கிறாங்க...

''லட்சக்கணக்குல லஞ்சம் குடுத்து, பணியில சேரவும் ஒரு குரூப் தயாரா இருக்குதுங்க... பணம் குடுத்து இந்த வேலையில சேர்ந்தவங்க, சாணி அள்ள தனியா ஆள் வச்ச கதையெல்லாம் 10 வருஷத்துக்கு முந்தியே நடந்திருக்காம்... தட்டிக் கேட்ட சில டாக்டர்களுக்கு அடியும் விழுந்திருக்குங்க... ''அதனால, 'இந்த வேலைக்கு, அந்தந்த மாவட்டத்துல தொகுப்பூதியத்துல ஆள் போட்டா பிரச்னை வராது... வேலையும் ஒழுங்கா நடக்கும்'னு கால்நடை டாக்டர்கள் சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.
Read More

Monday, April 4, 2022

இன்றைய மாணவர்களுக்கு! - விஷன் 2025

April 04, 2022 0
அனைத்தையும் கற்றுக்கொள்வதற்கான மிக பிரம்மாண்டமான வாய்ப்புகளை ஆன்லைன் இன்றைய மாணவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அவற்றில் ஒரு மாணவர் எவற்றை கற்றுகொள்கிறார் என்பதே பிரதான கேள்வியாக உள்ளது!

அனைத்தையும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் கண்முன்னே குவிந்து கிடக்கும் சூழலே மாணவர்களை எதையும் கற்கவிடாமல் சோம்பேறித்தனத்தை வளர்த்துவிட்டதோ! என்ற அச்சம் எழுகிறது. உதாரணமாக, முன்பு வீடுகளில் இருக்கும் சில திரைப்படங்களுக்கான சி.டி.,க்களில் விரும்பியதை தேர்வு செய்வது எளிதாக இருந்தது. ஆனால் இன்று ஒ.டி.டி.,க்களே நூற்றுக்கும் மேல் உள்ளன.

அவற்றில் திரைப்படங்களுக்கான எண்ணிக்கை என்பது கணக்கில் அடங்காத நிலையில், எந்த திரைப்படத்தை பார்ப்பது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. அதைப்போல, இன்று அனைத்தையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளே, கற்றுக்கொள்வதற்கான ஆர்வத்தை குறைத்துவிடுகிறது.

இத்தகைய சூழலில், வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள, தனக்கு எவை சரியானது, தன்னால் எவை முடியும் என்ற தெளிவும், புரிதலும் மாணவர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. மேலும், வாய்ப்புகளுக்கு ஏற்ப தனக்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சூழலையும், விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு ஏற்படுத்துக்கொடுப்பதற்கே எங்கள் கல்வி நிறுவனங்களில் &'விஷன் 2025’ என்ற தலைப்பின் கீழ் பிரத்யேக திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். 17 அம்சங்கள்

எஸ்.டி.ஜி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் &'நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள்’என்ற 17 அம்சங்களை நோக்கி எங்களது கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் ஒவ்வொருவரும் &'புராஜெக்ட்’ மேற்கொள்கின்றனர். எங்கள் முன்னாள் மாணவர்கள் ஏற்கனவே செய்த புராஜெக்ட்களையும் 17 அம்சங்களின் கீழ் கொண்டு வந்துவிட்டோம். மாணவர்களுக்கு சரியான வழிமுறையை காண்பிக்க வேண்டும் என்ற எங்களது தேடுதலுக்கு கொரோனா காலத்திலான ஊரடங்கு சரியான வழியை காண்பித்து விட்டது என்றே கூறலாம்.

ஏனெனில், சமூகத்திற்கு பயனுள்ள வகையிலான புராஜெக்ட்களை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற குறிக்கொளை மனப்பூர்வமாக உள்வாங்கி, செயல்வடிவத்தை உருவாக்கி, அவற்றை செயல்படுத்துவதற்கான நேரத்தை ஊரடங்கு காலமே எங்களுக்கு வழங்கியது. சமூகத்திற்கான தீர்வு

இன்றைய சமூகம் ஏராளமான பிரச்னைகளால் சூழ்ந்துள்ளன. அவற்றில் சிலவற்றையாவது முறையாக புரிந்துகொண்டு, அவற்றிற்கு சரியான தீர்வு காண மாணவர்கள் முனைப்புகாட்ட வேண்டும். ஒரே பிரச்னைக்கு ஒவ்வொரு மாணவரும் அவரது சிந்தனைக்கும், கற்பனை திறனுக்கும் ஏற்ப ஒவ்வொருவிதமான தீர்வுகளை அளிப்பர். அவற்றில் எளிதான, சரியான தீர்வை புகுத்த வேண்டும். இதற்கு ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட கண்டுபிடிப்புகளையும், அவற்றின் அடிப்படைகளையும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், மதிப்பெண்களுக்காக மட்டும் கல்வி கற்காமல், சமூகம் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும்போது மாணவர்களாலும் திறம்பட செயல்பட முடியும். எங்களது இந்த குறிக்கோள் நிச்சயம் வெற்றி பெறும்... 2025க்குள் சிறந்த நிலையை அடைவோம் என்று நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

- சாய்பிரகாஷ் லியோமுத்து, சி.இ.ஓ., சாய்ராம் கல்வி நிறுவனங்கள், சென்னை.
Read More

Post Top Ad

Your Ad Spot