UGC - பல்கலைக்கழக மானிய குழு மறுசீரமைப்பு Reorganization of University Grants Commission

பல்கலைக்கழக மானிய குழு மறுசீரமைப்பு Reorganization of University Grants Commission

கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் உட்பட 2704 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதான், வணக்கம் கோயம்புத்தூர், எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள் என தமிழில் நலம் விசாரித்து தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது: இந்தியாவின் மற்ற கலாச்சாரங்களை விட பழமையான பண்பாட்டை தமிழகம் கொண்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் கலாச்சாரம் பனாரஸில் கொண்டாடப்பட்டது. பிரதமர் அங்கு திருக்குறளையும் திருவள்ளுவரின் பெருமையும் எடுத்துரைத்தார். திருக்குறளை நாம் படித்தாலே நமது அறிவு மற்றும் வாழ்க்கைக்கு தேவையான நல்லொழுக்கங்கள் தெரிந்துவிடும். திருவள்ளுவர் இருள் சூழ்ந்த சமுதாயத்திற்கு ஒளி கொடுத்தவர்.

ஜனநாயகத்துக்கு இந்தியா முன்னோடியாக இருக்கிறது. பெண் கல்வி பெண் ஆளுமை உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்கிறது. நாட்டின் அனைத்து மொழிகளும் முக்கியம். ஒரு மொழியை விட இன்னொரு மொழி சிறந்தது என்று இல்லை, எல்லா மொழிகளும் தேசிய மொழிதான். இவ்வாறு தர்மேந்திர பிரதான் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”நடப்பு நிதி ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பி ன்போது பிரதமர் மோடி தேசிய கல்விக் கொள்கை தொடர்பான பல்வேறு திட்டங்களையும் அதற்கான நிதி உதவிகளையும் அறிவிக்க உள்ளதாகவும், தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டார். பல்வேறு புதிய கல்வி நிறுவனங்கள் வருவது கல்வியின் தரத்தை பாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வி நிறுவனங்களுக்கும் தரத்துக்கும் சம்பந்தம் இல்லை எனவும், புது கல்வி நிறுவனங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக புதுப்புது திறமைகள் வெளியாகி கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், நாம் பல்வேறு தொழில்நுட்பங்களுக்காக வெளிநாடுகளையே நம்பியிருந்த சூழ்நிலையில் தற்போது இந்தியா சுயமாக தொழில்நுட்பங்களை உருவாக்கி வளர்ச்சி அடைந்து வருகிறது எனவும் குறிப்பாக மொபைல் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு என பாரத் ஆப்ரேட்டிங் சிஸ்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு துறைகளிலும் தொழில்நுட்ப ரீதியாக நமது நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது என தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானிய குழுவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பல்கலைகழக மானிய குழு மறுசீரமைப்பு செய்யப்படும் என தெரிவித்தார்
Post a Comment (0)
Previous Post Next Post