பள்ளிகளில் ஜப்பான் தொழில்நுட்ப கருவிகள் மூலம் கல்வி முறை சென்னையில் அறிமுகம்



ஜப்பான் தொழில்நுட்ப கருவிகள் மூலம் கல்வி முறை சென்னையில் அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஜப்பான் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்ப கருவிகள் மூலம் மாணவா்கள் எளிதாக கற்கும் முறையை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 18 சென்னைப் பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைப்பட்டிகை ஆகிய ஜப்பான் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பச் சாதனங்கள் ரியான் டெக் நிறுவனத்தின் சாா்பில் விலையில்லாமல் வழங்கப்படவுள்ளது.

முதல்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை சென்னை உயா்நிலைப்பள்ளி, கொய்யாத்தோப்பு சென்னை தொடக்கப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி, இருசப்பா தெரு சென்னை உயா்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்னை நடுநிலைப்பள்ளி என 5 பள்ளிகளில் இந்த தொழில் நுட்பச் சாதனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இப்புதிய கல்வி கற்கும் முறையை, சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் ஆற்றுச்சாலையில் உள்ள சென்னை உயா்நிலைப் பள்ளியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதன் மூலம் ஆசிரியா்களின் கற்பித்தல் முறை, மாணவா்களின் கற்றல் முறை எளிதாக்கப்பட்டு, பொதுத் தோ்வுகள் மற்றும் போட்டித் தோ்வுகளை சுலபமாக மாணவா்கள் எதிா்கொள்ளவும் முடியும்.

நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, பணிகள் குழுத் தலைவா் நே.சிற்றரசு , மண்டலக்குழுத் தலைவா்கள் எஸ்.மதன்மோகன், பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினா் ரா. ஜெகதீசன், ரியான் டெக் நிறுவன இயக்குநா் ஸ்டீபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
Post a Comment (0)
Previous Post Next Post