2023ம் ஆண்டில் 11 வகையான தேர்வுகளை நடத்துகிறது TNPSC

2023ம் ஆண்டில் 11 வகையான தேர்வுகளை நடத்துகிறது; நவம்பரில் குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியாகிறது - TNPSC

2023ம் ஆண்டில் 11 வகையான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பரில் வெளியாகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு துறைகளில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு உதவியாக இருந்து வருகிறது. அதன்படி, வரும் 2023ம் ஆண்டுக்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி 2023ம் ஆண்டு 11 வகையான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. அதாவது, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் 828 பணியிடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும். தேர்வு மே மாதம் நடைபெறும்.

தேர்வு முடிவுகள் ஜூலையிலும், ஆகஸ்ட்டில் கலந்தாய்வும் நடைபெறுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சாலை ஆய்வாளர் பதவியில் 762 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும். தேர்வு மே மாதம் நடைபெறும். ஒருங்கிணைந்த பொறியியல் பணியில் 101 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். டிசம்பர் மாதம் தேர்வும், 2024ம் ஆண்டு பிப்ரவரியில் எழுத்து தேர்வும், மார்ச்சில் நேர்முக தேர்வு, கலந்தாய்வு நடைபெறுகிறது.

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்படுகிறது. எவ்வளவு பணியிடங்கள் என்பது குறித்து அப்போது அறிவிக்கப்படும். எழுத்து தேர்வு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கிறது. தொடர்ந்து எழுத்து தேர்வு முடிவுகள் மே மாதமும், கலந்தாய்வு ஜூலை மாதம் நடக்கிறது. குறிப்பிட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ, பின்னரோ மாற்றங்களுக்கு உட்பட்டது. தேர்வு திட்டம் மற்றும் பாடத்திட்டமானது தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. இதே போல இந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட 12 வகையான தேர்வுகளுக்கான எழுத்து தேர்வு எப்போது நடைபெறும் என்ற முழு விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post