MBBS, BDS : பொதுப்பிரிவு கலந்தாய்வு நிறைவு: 29-இல் இட ஒதுக்கீடு பட்டியல்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று நிறைவு: 29-இல் இட ஒதுக்கீடு பட்டியல்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இணையவழியில் நடைபெறும் பொதுப்பிரிவு கலந்தாய்வு வியாழக்கிழமையுடன் (அக்.27) நிறைவடைகிறது. இடஒதுக்கீடு விவரங்கள் அக்.29-இல் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 எம்.பி.பி.எஸ்., 1,380 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. பொதுப் பிரிவினருக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆன்லைனில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது.

அன்றைய தினமே மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நேரடியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.

இதில், 65 இடங்கள் நிரம்பியுள்ளன. மறுநாள் 20-ஆம் தேதி நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வில் 565 இடங்கள் நிரப்பப்பட்டன. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் கடந்த 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை வரை கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவக் கல்வி தோ்வுக்குழுச் செயலாளா் ஆா்.முத்துச்செல்வன் கூறியதாவது: தீபாவளி பண்டிகை வந்ததால் மாணவா்கள் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாணவா்கள், அவா்களின் பெற்றோா் கேட்டுக் கொண்டதால் 27-ஆம் தேதி வரை கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது.

29-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியல் இணையதளங்களில் வெளியிடப்படும். 28-ஆம் தேதியுடன் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நிறைவடைகிறது. அதற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியல் வரும் 30-ஆம் தேதி இணையதளங்களில் வெளியிடப்படும் என்றாா் அவா்.
Post a Comment (0)
Previous Post Next Post