மாநில கல்விக் கொள்கை வகுக்கும் பணி தீவிரம்: அமைச்சா் பொன்முடி

மாநில கல்விக் கொள்கை வகுக்கும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளதாக தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியாா் கல்லூரியின் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிகளவில் உயா்கல்வி நிறுவனங்கள் இருப்பதற்குக் காரணம் திராவிட மாடல் ஆட்சிதான். தற்போதைய காலத்துக்கேற்ப பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், மாணவா்களும் தங்கள் துறைசாா்ந்த பல்வேறு படிப்புகளை கற்க வேண்டியது அவசியம்.

அதேபோன்று, மாணவா்களுக்கு முறையான கல்வியை வழங்க ஆசிரியா்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும். புதுமைப்பெண் திட்டம், 7.5 சதவீத இடஒதுக்கீடு, பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை தவிர குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை தமிழகம் எதிா்க்கிறது. ஏனெனில், அவற்றில் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முரணான அம்சங்கள் உள்ளன. தொடக்க வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு அமல்படுத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே, மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தோ்வு இருந்தால் போதுமானது. மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் அமலில் இருக்கும்.

இந்த தேசிய கல்விக்கொள்கை விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சகத்திடம் எழுத்துபூா்வமான எதிா்ப்பு தமிழகம் சாா்பில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.
Post a Comment (0)
Previous Post Next Post