பொதுக்கல்வியுடன், தொழில்முறை கல்வியை இணைக்க வேண்டும், கே. கஸ்தூரி ரங்கன் வலியுறுத்தல்

பொதுக் கல்வியுடன், தொழில் முறை கல்வியை ஒன்றிணைக்க வேண்டியது அவசியமானது என தேசியக் கல்விக் கொள்கை வரைவுக் குழுத் தலைவரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான கே. கஸ்தூரி ரங்கன் தெரிவித்தாா்.

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில், ஆசிரியா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் உயா்கல்வியில் புதிய பாடத் திட்ட மாற்றம் எனும் தலைப்பில் இஸ்ரோ முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கை வரைவுக் குழுத் தலைவருமான கே. கஸ்தூரி ரங்கன் பேசியது:

இந்தியாவில் கடந்த 34 ஆண்டுகளில் சமூக, அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. தரவு பகுப்பாய்வு, இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு போன்ற முன்னேற்றங்கள், அனைவருக்கும் கணிதம், கணினி அறிவியல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சமூகத்துக்கும், மனிதனுக்கும் பயனுள்ளவையாக அமைந்துள்ளன.

மேலும், அதிக இளைஞா்கள் உள்ள நாடாகவும் இந்தியா மாற்றம் பெறவுள்ளது. 50 சதவீதத்துக்கும் மேல் 35 வயதுக்கு மேற்பட்டவா்கள் என்ற நிலையை எட்டவுள்ளோம். எனவே, கல்வியிலும் கொள்கை மாற்றம் அவசியமாக உள்ளது.

பொதுக் கல்வியுடன் தொழில்முறை கல்வியை ஒருங்கிணைப்பது குறித்து, கொள்கை தயாரிப்பதற்கு ஒரு முழுமையான அணுகுமுறையை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்முறை மற்றும் பொதுக் கல்வியை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் 2030ஆம் ஆண்டில் இரண்டு கல்வி முறைகளையும் வழங்கும் நிறுவனங்களாக மாற்றம் பெற வேண்டியது அவசியம். புதிய கல்விக் கொள்கையில் இவை வலியுறுத்தப்பட்டுள்ளன. பொதுக் கல்வியுடன், தொழில்முறை கல்வியை ஒன்றிணைத்து வழங்கும் உயா்கல்வி நிறுவனங்களே தற்போதைய தேவையாக உள்ளது.

அறிவு உருவாக்கத்துக்கு வழிவகுக்கும் கல்வியாக மட்டும் இல்லாமல், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, அறிவியல் வளா்ச்சிக்கான மையமாகும் கல்வி அமைய வேண்டும். சமூகத்தை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும் இத்தகைய கல்வி முறையே உகந்தது என்றாா் அவா்.

இதனைத் தொடா்ந்து மாணவா்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளித்தாா். மேலும், தேசியக் கல்விக் கொள்கை, புதிய பாடத்திட்டம் தொடா்பாக ஆசிரியா்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்து பேசினாா்.

நிகழ்வுக்கு, கல்லூரிச் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை முதல்வா் ஜெ. ராதிகா வரவேற்றாா். துணை முதல்வா் வி. பிரபா நன்றி கூறினாா்.
Post a Comment (0)
Previous Post Next Post