மத்திய பல்கலையில் தமிழ்மொழி வினாத்தாள் கிடைக்காததால் 12ம் தேதிக்கு நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு: பல்கலை நிர்வாகம் தகவல்

திருவாரூர் மத்திய பல்கலைகழகத்தில் நேற்று துவங்கிய நுழைவு தேர்விற்கு தமிழ்மொழி வினாத்தாள் கிடைக்காதவர்களுக்கு வரும் 12ந் தேதி தேர்வு நடைபெறும் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் இயங்கி வரும் இந்த பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் 13 மொழிகளில் நுழைவுத் தேர்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முதல் இந்த நுழைவுத் தேர்வுகள் துவங்கியுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வரும் 27 பாடப்பிரிவுகளுக்காக இந்தியா முழுவதும் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் நடப்பாண்டில் தமிழ்மொழியிலும் தேர்வு நடத்துவதற்கு பல்கலைகழகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனையொட்டி தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று தமிழ் மொழிக்கான வினாத்தாள் கிடைக்கப் பெறாததால் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று தேர்வு எழுத முடியாதவர்களுக்கு வரும் 12ம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என மத்திய பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலையில் வழக்கமாக 3 மணிக்கு துவங்க வேண்டிய பிற மொழி தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக சர்வர் பிரச்னையால் வினாத்தாள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் 5 மணிக்கு துவங்கிய தேர்வானது இரவு 9 மணி வரையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Post a Comment (0)
Previous Post Next Post