திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

தமிழகம் திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

பள்ளிப்பட்டு: ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களை போட்டி தேர்வுக்கு ஊக்கிவைக்கும் வகையில், மத்திய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தொகை திட்டத்தின் கீழ் தேசிய திறனாய்வுத் தேர்வு நடக்கிறது. இதில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டு நடைபெற்ற இத்தேர்வில் ஆர்.கே.பேட்டை அருகே சந்திரவிலாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து 13 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 11 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கிராமபுற அரசுப் பள்ளி மாணவர்களை, ஊக்குவித்த ஆசிரியர்களை கல்வியாளர்கள், கிராமபொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியை துளசிபாலா கூறுகையில், `கிராம பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். போட்டித் தேர்வு மட்டுமே ஒருவரின் சிறந்த எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர்கள் திறனாய்வு தேர்வில் பங்கேற்று 90 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்’ என கூறினார்.
Post a Comment (0)
Previous Post Next Post