மருத்துவ மேற்படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டில் முறைகேடு - 6 மாதங்களுக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தேர்வுக்குழுவின் முன்னாள் செயலாளர் மீதான துறை ரீதியான நடவடிக்கையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் கடந்த 2020-21ம் கல்வியாண்டுக்கு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன் தான் இதற்கு காரணம் என சிபிசிஐடி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் உள்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து செல்வராஜன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செல்வராஜன் மற்றும் அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் கல்லூரிகள்தான் அதிக கட்டணம் வசூலித்தன. ஆனால், தேர்வுக்குழு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அதில், கலந்தாய்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரிதான். முன்னாள் செயலாளர் செல்வராஜன் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீதான துறைரீதியான நடவடிக்கையை அரசு 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அவருக்கு சேரவேண்டிய ஓய்வூதிய பலன்களை நிறுத்திவைக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post