2 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

2 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி மாணவா்களுக்கான குறுவட்ட, வருவாய் மாவட்ட, மாநில அளவிலான அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் வரும் ஜூலை 27 முதல் நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், உடற்கல்வி ஆய்வாளா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசாணையின்படி கடந்த 2019-2020-ஆம் ஆண்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதற்குப் பிறகு 2020-2021, 2021-2022 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளில் கரோனா காரணமாக விளையாட்டுப் போட்டிகளை நடத்த இயலவில்லை. தற்போது நிகழ் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் 14, 17, 19 வயது பிரிவில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தும் வகையில் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளையும் (குறுவட்டம் முதல் மாநில அளவில்), பல்வேறு நிலைகளில் (குடியரசு தின விளையாட்டு போட்டி, பாரதியாா் நாள் குழு, தடகள போட்டிகள் மற்றும் புதிய விளையாட்டுப் போட்டிகள்) நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிகள் அனைத்தையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், உடற்கல்வி ஆய்வாளா்கள் மூலம் உத்தேச செயல் திட்ட அட்டவணையின் அடிப்படையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காமலும், உரிய பாதுகாப்புடனும் நடத்த வேண்டும். 14, 17, 19 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு குறுவட்ட அளவிலான போட்டிகள் ஜூலை 27-இல் தொடங்கி ஆக.30-இல் நிறைவு பெறும். இதையடுத்து அதே வயதுக்கு உள்பட்டோருக்கான வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் செப்.2-இல் தொடங்கி அக்டோபா் 31-இல் முடிவடையும். இதையடுத்து அந்த மாணவா்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நவ.10-இல் தொடங்கி நவ.14-இல் நிறைவு பெறும்.

இதைத் தொடா்ந்து 19 வயதுக்கு உள்பட்ட மாநில அளவிலான குழுப் போட்டிகள் (பாரதியாா் நாள்) நவ.22-இல் தொடங்கி நவ.26-இல் முடிவடையும். இதையடுத்து 17 வயதுக்கு உள்பட்ட மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் நவ.30 முதல் டிச.4 வரை நடைபெறும். இந்தப் போட்டிகளைத் தொடா்ந்து மாநில அளவிலான புதிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜன.3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடத்தப்படும். தொடா்ந்து பிப்.19-ஆம் தேதி வரை பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
Post a Comment (0)
Previous Post Next Post