படிப்படியாக அமலுக்கு வரும் தேசிய கல்வி கொள்கை!

நாடு முழுதும் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த, மத்திய அரசு, தேசிய கல்வி கொள்கையை வகுத்துள்ளது. இந்த கொள்கையின் பெரும்பாலான அம்சங்கள், அனைத்து தரப்பு மக்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளதால், பெரும்பாலான மாநிலங்களில், புதிய கல்வி கொள்கை அமலுக்கு வந்து விட்டது.தமிழகத்தில் இந்த கல்வி கொள்கைக்கு அரசியல் சாயம் பூசியதால், தி.மு.க., அரசு எதிர்த்து வருகிறது.

அதேநேரத்தில், இந்த எதிர்ப்பு என்பது வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. புதிய கல்வி கொள்கையின் ஒவ்வொரு அம்சங்களும், முதல்வர் கையாலேயே துவங்கப்படுகிறது. இந்த வரிசையில், இல்லம் தேடி கல்வி திட்டம், பள்ளி மேலாண்மை குழு அமைப்பு ஆகியவை முதல்வரால் துவங்கப்பட்டன. இதை தொடர்ந்து, நேற்று எண்ணும் எழுத்தும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஆனால் இது, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்டத்தில், 'பவுண்டேஷனல் லிட்ரஸி மற்றும் நியூமெரசி' என்ற அடிப்படை எண்ணும் எழுத்தும் என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2020ம் ஆண்டில், புதிய கல்வி கொள்கை அமலானது முதல், தமிழகம் உட்பட பல மாநிலங்களில். இது நடைமுறையில் உள்ளது.பெங்களூரை சேர்ந்த 'யுரேகா' மற்றும் சென்னையை சேர்ந்த 'மதி பவுண்டேஷன்' ஆகிய தனியார் நிறுவனங்கள் வழியாக, தமிழக அரசு பள்ளிகளில், எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சிகள், ஏற்கனவே அமலாகி விட்டன.

இந்நிலையில் தான், எண்ணும் எழுத்தும் என்ற திட்டம், திராவிட மாடலின் புதிய முன்னோடி திட்டம் என்பது போல், நேற்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் உரையை தயாரித்தவர்களும், திட்டத்தின் உண்மையான வரலாற்றை மறைத்து, புதிய திட்டம் போன்றே, உரையில் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம், புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பது போல் காட்டினாலும், அதன் அம்சங்களை, முதல்வரே தன் சொந்த திட்டம் போல் துவங்கி வைப்பது, மத்திய கல்வி துறை அதிகாரிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதற்காக, தமிழக கல்வித் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். தேசிய அளவில் தமிழகம் 'டாப்!'

கடந்த கல்வி ஆண்டில், மத்திய அரசின் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை அமல்படுத்திய, மாநிலங்களின் செயல் திறன் அறிக்கையை, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு, 2021 டிசம்பரில் வெளியிட்டுள்ளது.

இதில், பெரிய மாநிலங்களின் செயல் திறன் பட்டியலில், மேற்கு வங்கம், 58.95 சதவீதம் பெற்று, நாட்டில்முதலிடம் பெற்றது. இதையடுத்து, 55.49 சதவீதம் பெற்று, தமிழகம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. 53.11 சதவீதம் பெற்று, மஹாராஷ்டிரா மாநிலம், மூன்றாம் இடம் பெற்றது.
Post a Comment (0)
Previous Post Next Post