ஆசிரியர்களை மாற்றக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

நாட்றாம்பள்ளி: அரசுப்பள்ளி ஆசிரியரை இட மாற்றக்கோரி மாணவர்கள் தரை யில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம் பள்ளி வட்டம் கூத்தாண்ட குப்பம் அடுத்த சஞ்சீவினூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 135 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கிரிஜா என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்

இந்நிலையில், இப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து பாடம் நடத்துவதாகவும், இதை தலைமை ஆசிரியர் கண்டிப்பதில்லை எனக்கூறி பள்ளி மாணவர்கள் சஞ்சீவினூர் - மல்லகுண்டா சாலையில் படுத்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாணவர்களுடன் பெற்றோரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறும்போது, ‘‘இப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் சரிவர பள்ளிக்கு வருவது இல்லை. மேலும், இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். தலைமை ஆசிரியர் கிரிஜாவும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகிய 2 பேரையும் மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.

இதைத்தொடர்ந்து, நாட்றாம் பள்ளி காவல் ஆய்வாளர் சாந்தி, உதவி காவல் ஆய்வாளர் முனிரத்தினம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அங்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இறுதியில், பள்ளியில் தேவை யான மாற்றங்கள் விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள், பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Post a Comment (0)
Previous Post Next Post