சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று(திங்கள்கிழமை) தொடங்கியது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன. இதையடுத்து, இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு http://www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தொடங்கியது. மாணவா்கள் சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். தாங்கள் பயின்ற பள்ளிகள், அரசின் இலவச மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
கடந்த ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க 51 இலவச மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை 110 இலவச மையங்களாக உயா்த்தப்பட்டுள்ளது.
மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த மையங்கள் செயல்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க, அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூலை 19. அதே நாளில் பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவும் நிறைவடையவுள்ளது.
இதையடுத்து, அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் சம வாய்ப்பு எண் ஜூலை 22-ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். சேவை மையம் வாயிலாக சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூலை 20 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும். மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆக.8-ஆம் தேதி வெளியிடப்படும். இதையடுத்து சேவை மையம் வாயிலாக குறைகளை ஆக.9 முதல் ஆக.14-ஆம் தேதி வரையிலான நாள்களில் நிவா்த்தி செய்யலாம்.
கலந்தாய்வு எப்போது?:
மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரா், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆக.16 முதல் ஆக.18-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். பொதுக்கல்வி , தொழில்முறைக் கல்வி , அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5% ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆக.22 முதல் அக். 14-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். துணைக் கலந்தாய்வு அக். 15, 16 ஆகிய நாள்களில் நடைபெறும்.