மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் எளிமையான முறையில் ஓய்வூதியம் பெறும் வகையில், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து ஒருங்கிணைந்த வலைதளம் ஏற்படுத்தப்படும் என மத்திய பணியாளர், மக்கள் குறைதீர், ஓய்வூதியத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு விவரம்:
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வங்கியாளர்கள் விழிப்புணர்வு மாநாட்டின் ஒரு பகுதியாக ஓய்வூதிய கொள்கை சீர்திருத்தம், ஓய்வூதிய விநியோக டிஜிட்டல் மயமாக்கம் தொடர்பாக அமர்வுகள் நடைபெற்றன. குறிப்பாக ஓய்வூதியதாரர்களுக்கான வருமான வரி பிரச்னை தொடர்பாகவும், ஆயுள் சான்றிதழை ஆன்லைனில் சமர்ப்பிப்பது குறித்தும் சிறப்பு அமர்வுகள் நடைபெற்றன.
இந்தக் கூட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் தங்குதடையின்றி ஓய்வூதியம் பெறும் நோக்கில், தற்போது நடைமுறையில் உள்ள பணியாளர், மக்கள் குறைதீர், ஓய்வூதியத் துறை வலைதளத்தை பாரத ஸ்டேட் வங்கியின் வலைதளத்துடன் இணைத்து ஒருங்கிணைந்த வலைதளம் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டது.
ஓய்வூதியதாரர் ஆயுள் சான்றிதழுக்கான முக அடையாளம் காணும் எண்ம தொழில்நுட்பம் குறித்து வங்கிகளால் விரிவாக விளம்பரப்படுத்தப்படும். ஓய்வூதியர்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் எண்ம ஆயுள் சான்றிதழும், முக அடையாள தொழில்நுட்பமும் திருப்புமுனையாக அமையும். இந்தத் திட்டங்களின் வாயிலாக ஓய்வூதியதாரர்களின் அன்றாட வாழ்க்கை இலகுவாகும். இந்த இலக்கு மிகப்பெரிய அளவில் எட்டப்படும்.
இதேபோல பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து மேலும் நான்கு விழிப்புணர்வுக் கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Federal Government
Federal Government Notice
Integrated Website for Retirees
PENSIONERS
Schemes