தடுப்பூசி: சுகாதாரம், பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் பினராயி உத்தரவு

கேரளத்தில் 15 - 18 வயதுக்குட்பட்டோருக்கு இந்த வார இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா தொற்று திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். கடந்த வாரம் திருமணம், இறப்பு, அரசியல், கலாசார நிகழ்வுகளில் 75 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது 50 நபர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசியல், கலாசார, பொது மற்றும் தனியார் அமைப்பு சார்ந்த நிகழ்வுகளை இணையம் வாயிலாக நடத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வார இறுதி நாள் ஊரடங்கு அல்லது மாலை நேர ஊரடங்கு விதிக்கப்படவில்லை. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து கரோனாவைக் கட்டுப்படுத்திவதில் அரசுக்கு உதவ வேண்டும்.

தற்போதைய சூழலில் பள்ளிகள் வழக்கம்போன்று செயல்படும். பள்ளிகளை மூடுவது குறித்து அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித் துறை அதிகாரிகளுடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

பள்ளிகளில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post