உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸின் அடுத்தடுத்த உருமாற்றங்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் முதல் அலையை ஏற்படுத்தியது என்றால் அதன் பிறகு ஆல்பா, டெல்டா அடுத்தடுத்து அலைகளை ஏற்படுத்தின. இதனால் தான் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்ட போது, அதைக் கண்டு உலக நாடுகள் அஞ்சின.ஓமிக்ரான் அச்சமே இன்னும் முடியாத நிலையில், டெல்மிக்ரான் (Delmicron) என்ற புதிய உருமாறிய கொரோனா குறித்து அண்மையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்புளுயன்சா எனப்படும் குளிர் காய்ச்சலுடன் கொரோனா பாதிப்பும் சேர்ந்த ஃப்ளோரொனா என்னும் நோய் இஸ்ரேலில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவனை ஒன்றில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இஸ்ரேலில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 3வது டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டவர்கள். 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் 2 டோஸ் செலுத்தியுள்ளனர். அங்கேயே இம்மாதிரியான புதுவிதமான தொற்றுகள் ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.