பள்ளிகளில் லேண்ட்லைன் போன் கட்டாயம்: அமைச்சர் உத்தரவு

கேரளாவில் அரசு கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தரைவழி தொலைபேசி (லேண்ட் லைன் போன்) இணைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் அரசு பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் தொலைபேசி இல்லாததால், கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கல்வி துறை அமைச்சர் சிவன்குட்டிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. மேலும் தொலைபேசி உள்ள பள்ளிகளில் யாரும் போன் எடுப்பதில்லை என்றும் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் சிவன்குட்டி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:கேரள கல்வித்துறையின் கீழ் உள்ள தொடக்க பள்ளி முதல் மேல்நிலை பள்ளி வரை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தரைவழி தொலைபேசி கட்டாயம் இருக்க வேண்டும். பழுதாகி இருந்தால் அவற்றை உடனே சரி செய்ய வேண்டும். தொலைபேசி இல்லாத பள்ளிகளில் புதிதாக இணைப்பு எடுக்க வேண்டும். தொலைபேசியில் விவரங்களை கேட்பதற்கு ஊழியரை நியமிக்க வேண்டும். யார் புகார் செய்தாலும் அதை பதிவு செய்ய வேண்டும்.

புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்திற்கு ஒரு முறை பரிசீலனை செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்படும் கடிதங்களில் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். யாராவது போன் செய்தால் அவர்கள் கேட்கும் முழு விவரங்களை பணிவுடன் தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவு வெளியான 10 நாட்களுக்குள் அந்தந்த கல்வி நிறுவனங்களில் தொலைபேசி எண்ணுடன் அறிக்கை தாக்க செய்ய வேண்டும். அவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post