1 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் - புது திட்டம் துவக்கம்

உத்தர பிரதேசத்தில் ஒரு கோடி மாணவர்களுக்கு இலவசமாக 'டேப்லட், ஸ்மார்ட் போன்' வழங்கும் திட்டத்தை, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார்.உத்தர பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் உ.பி.,யில் பா.ஜ., ஏற்கனவே பிரசாரத்தை துவக்கியுள்ளது.

வாஜ்பாய் பிறந்த நாள்

மத்திய - மாநில அரசுகள் சார்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளான நேற்று ஒரு கோடி மாணவர்களுக்கு இலவசமாக, டேப்லட் மற்றும் ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை, லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். ஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு டேப்லட், ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:ஒரு காலத்தில் அரசில் ஏதாவது வேலை வாய்ப்பு உருவானால், அதை ஆட்சியில் இருந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பணம் பறிக்கும் வாய்ப்பாக பயன்படுத்தினர்.

பணி நியமனங்கள்

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த அரசு 4.5 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த பணி நியமனங்கள் மிகவும் வெளிப்படையாக நடந்தன.கொரோனா வைரஸ் குறித்தும், தடுப்பூசி குறித்தும் சில இளம் அரசியல் தலைவர்கள் எதிர்மறையான கருத்துக்களை கூறி மக்களை குழப்ப நினைத்தனர். அவர்களிடம் இருந்து இளைஞர்கள் எச்சரிக்கையாக விலகியிருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய கல்வி அமைச்சருமான தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Post a Comment (0)
Previous Post Next Post