விரைவில் நீரிழிவு நோய்க்கான பட்டப்படிப்பு

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவக் கல்லூரிகள் இணைந்து நடத்திய நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நீரிழிவு குறித்த விழிப்புணர்வு கையேட்டினையும், ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் புதியதாக நீரிழிவுநோய் பாத பராமரிப்பு பிரிவு தொடங்கி வைத்தனர். தேர்வு செய்யப்பட்ட 10 நீரிழிவு நோயாளிகள் மற்றும் 5 கர்ப்பகால நீரிழிவு நோய் உடைய கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் கருவி குளுக்கோமீட்டர், மற்றும் 6 பொருட்கள் அடங்கிய நீரிழிவு நோயாளிகளுக்கான பாத பராமரிப்பு பெட்டகத்தினை வழங்கினர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் மட்டும் 7.7 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 8 முதல் 10 சதவிகிதம் வரை மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவிலேயே முதன்முறையாக நீரிழிவு நோய்க்கென்று தனித்துறை சென்னையிலுள்ள ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 1976ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலாம் வகை நீரிழிவு நோயாளிகள் டைப்-1 நீரிழிவு மெல்லிட்டஸ் விலையில்லா இன்சுலின் மருந்து வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக நம் மாநிலத்தில்தான் தொடங்கப்பட்டது. உலக நீரிழிவுநோய் தினம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது.

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு மக்களின் விழிப்புணர்வுக்காக ஒரு கருப்பொருள் வெளியிடுகிறது. இந்த ஆண்டு 2021க்கான தலைப்பு நீரிழிவு சிகிச்சைக்கான வசதி வாய்ப்புகள் ஆகும். இதுவரை நீரிழிவு நோய்க்கு பட்டயப்படிப்பு மட்டுமே இருந்து வருகிறது. நீரிழிவு நோய்க்கு பட்டப்படிப்பு பயில்வதற்கு முதல்வரின் ஆலோசனையின்படி, ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்று விரைவிலேயே நீரிழிவு நோய்க்கு பட்டப்படிப்பு பயில்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment (0)
Previous Post Next Post