கதையல்ல நிஜம்: 'மருத்துவராகும் பொறியியல் பட்டதாரி'ப் பெண்ணின் விடாமுயற்சி

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இளம்பொறியாளர் ஒருவர் மருத்துவாராக வேண்டும் என்ற தனது இளமைக்கால கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பொறியியல் பட்டம் பெற்று 10 ஆண்டுகளாக பொறியியல் துறையில் பணியாற்றிய இளம்பெண், தனது குழந்தைப் பருவ கனவை நிஜமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தாணே பகுதியைச் சேர்ந்தவர் ஆக்ருதி கியோல். 29 வயதான இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ராஜஸ்தானிலுள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலனியில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.

விருப்பத்துடன் படித்து பொறியியல் படிப்பை முடித்த அவர், பெரு நிறுவனங்களில் பணிபுரிவதை விரும்பவில்லை. இதனால் பெரிய நிறுவனங்களின் வாய்ப்பை மறுத்து, சிறிய நிறுவனங்களில் தனது பங்களிப்பை அளிக்கத் தொடங்கினார். பின்னர் சோதனை முயற்சியில் பொறியியல் துறையில் சவாலான பணிகளில் சேர்ந்து பணிபுரிந்துள்ளார். நாளொன்றுக்கு 14 முதல் 16 மணி நேரம் வேலை பார்த்ததால் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். உடலில் ஹார்மோன் பற்றாக்குறை ஏற்பட்டதால் அப்பணியை விடுத்து சில மாதங்கள் ஓய்வு பெற்றுள்ளார்.

மனதை ஒருநிலைப்படுத்த யோகா, ஓவியம் வரைதல் போன்றவற்றை மேற்கொண்டுள்ளார். பிறகு மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். அவரது பணிக்கு அதிக ஊதியம்கிடைத்தும் வாழ்க்கையில் திருப்தியின்மையையே உணர்ந்துள்ளார்.

பொறியியல் துறையில் அதிகம் கற்றுக்கொண்டாலும், அதில் மனநிறைவை அவர் அடையவில்லை. பெண்களை ஊக்கப்படுத்துவதில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், அதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரமிக்க எத்தனித்தார். கரோனா பொதுமுடக்கம் அதற்கு தடையாக இருந்தது. பிறகு வீட்டில் தனிமையில் இருந்த அவர், ஜாப்பானிய யோகா முறைகளை மேற்கொண்டுள்ளார். இதில் வாழ்கையின் மீதான பிடிப்பிற்கு பிடித்த விஷயங்களை செய்வது மட்டுமே தீர்வு என்பதை உண்ர்ந்துள்ளார். தனது மனம் மருத்துவத்தில் மகிழ்வுறும் என்று அவர் எண்ணினார்.

இது தொடர்பாக பேசிய அவர், ''பள்ளிப் பருவ காலத்தில் மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. கல்லூரி பருவத்தில் பொறியியல் துறையை தேர்வு செய்ததாகக் கூறுகிறார். நான் இந்த முடிவை எண்ணி வருத்தப்படவில்லை. பொறியியல் துறையில் கற்றுக்கொண்டது ஏராளம். பெண் பொறியாளர் என அழைக்கப்படுவதில் எனக்கு பெருமை. ஆனால், நான் இப்போது மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்று கூறுகிறார் ஆக்ருதி.

''வாழ்க்கையில் சாதிப்பதற்கும் இலக்கை அடைவதற்கும் வயது ஒரு தடையல்ல. நாம் அனைவரும் ஒரே மாதிரியான சிந்தனையின் சிக்கியுள்ளோம். எது நடந்ததோ அது நடந்ததுதான். மீண்டும் முதலில் இருந்து தொடங்க இயலாது. நமக்கு வயதாகிவிட்டது. பெண்ணாக இருந்து இலக்கை எட்டுவது கடினம் என்பதெல்லாம் பொய்.

மக்கள் தங்களது 30, 40 ஏன் 50 வயதில் கூட தங்களது இலக்குகளை கண்டறியலாம். வாழ்க்கையில் இலக்கை கண்டறிவதிலும், அடைவதிலும் வயதுக்கு இடமில்லை'' என்று கூறினார்.

மருத்துவராக வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக படிக்க ஆரம்பித்த அவர், நடந்து முடிந்த நீட் தேர்வில் 700க்கு 676 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் 1118வது இடத்தை பிடித்துள்ளார்.

''படிப்பதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் உள்ளது. வேதியியல், இயற்பியல் படித்த நான் தற்போது உயிரியல் படிக்க ஆரமித்துள்ளேன். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது எனது பெற்றோர்களுக்கு ஆச்சர்யம் தான். எனக்கு எய்ம்ஸ் அல்லது மும்பையிலுள்ள ஏதேனும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். என்னை விட இளம் வயதினருடன் மீண்டும் அமர்ந்து படிக்க உள்ளதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். இளம் தலைமுறையினரின் வேகம் எனக்கு உத்வேகத்தை அளிக்கும். இதனை ஒரு வாய்ப்பாக நான் பயன்படுத்திக்கொள்வேன். எனது மேற்படிப்புடன் அடுத்த 12 ஆண்டுகளை நான் இப்படிதான் செலவிட உள்ளேன். எனது வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சியை தரும் ஒன்றை நோக்கி நான் நடக்க ஆரமித்துள்ளேன்'' என்றார் ஆக்ருதி.
Post a Comment (0)
Previous Post Next Post