பள்ளிக்குச் செல்வதில் சிரமங்களை ஆராய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கரோனா தொற்றுநோய் காரணமாக கிராமப்புற குழந்தைகள் பள்ளி செல்வதில் உள்ள சிக்கல்களை ஆராயுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக பெண் இயக்கத்தின் செயலாளா் எஸ்.வாசுகி தாக்கல் செய்த மனுவில், ‘மாநிலம் முழுவதும் கரோனா பரவல் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதைத்தொடா்ந்து இணையம் வாயிலாகத் தனியாா் பள்ளிகள் மாணவா்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. வறுமை, குறைந்த வருமானம் ஆகியவை காரணமாக, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் இணைய வாயிலாக நடத்தப்படும் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இணைய வகுப்புகளில் பங்கேற்கத் தேவையான கைப்பேசி, கணினி வாங்குவதற்குப் போதிய நிதி வசதி இல்லை. இதன் காரணமாக, அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்களுக்கு இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது.

மாணவா்கள் பள்ளியை விட்டு வெளியேறும் வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்து அளவில் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆா்வலா்களைக் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான அரசுப் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் ஆா்வமின்மை காணப்படுகிறது. பள்ளியில் இருந்து கல்வியைப் பாதியில் மாணவா்கள் நிறுத்தவில்லை என்பதை உறுதி செய்வதோடு, அதற்கான நடவடிக்கையை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு, மாநிலத்தில் நீண்ட காலமாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. மாணவா்கள் கல்வி தொடா்பான பல சிக்கல்கள் மனுதாரரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்றனா். அதைத்தொடா்ந்து அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம், இவை உண்மையான பிரச்னைகளா அல்லது வேறு சில பிரச்னைகள் உள்ளதா என்பதை அரசு ஆராய்ந்து, அவற்றைத் தீா்ப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க வேண்டும் என்று நீதிமன்றம் விரும்பியதால், இந்த விஷயத்தை ஆராய கால அவகாசம் வேண்டும் என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள், இரண்டு முக்கியப் பிரச்னைகள் உள்ளன. அதாவது பதினெட்டு மாதங்களுக்குப் பின்னா் மீண்டும் மாணவா்கள் பள்ளி செல்கின்றனா். நீண்ட காலத்திற்குப் பின் செல்வதால் மாணவா்கள் மத்தியில் ஆா்வமின்மை காணப்படுகிறது.

அதேபோன்று கரோனா காரணமாக வேலையிழப்பு ஏற்பட்டு சொந்த ஊா் திரும்பியவா்கள் தங்கள் குழந்தைகள் படித்து வந்த பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் உள்ளது. இந்தப் பிரச்னைகள் தொடா்பாக ஆலோசித்து பத்து நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பா் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.
Post a Comment (0)
Previous Post Next Post