5 ஏக்கருக்குள் வைத்திருப்பவர்களுக்கே பயிர்க்கடன் தள்ளுபடியில் சலுகை -

ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2016ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசு பதவியேற்றவுடன், 5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு விவசாய சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தன.

விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனு மீது 2017ல் நடந்த விசாரணையின் போது, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

மேலும் இது தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும்படியும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.'தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது' எனக் கூறிய நீதிபதிகள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
Post a Comment (0)
Previous Post Next Post