உங்கள் பிள்ளைக்கு 3 அல்லது சுமார் 3 வயது ஆகிறதா? ஆகப் போகிறதா? அப்படியானால், உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் சில முக்கிய விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.
உங்கள் பிள்ளையை நீங்கள் சரியாக வளர்க்கிறீர்கள் என்பதற்கு இங்கு 10 கேள்விகள் தரப்பட்டுள்ளன. அவற்றுக்கு நீங்களே பதிலளித்து மதிப்பெண் போட்டு, ஒரு சிறந்த பெற்றோராக தேர்ச்சி பெற்று விட்டீர்களா என்று சோதித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தை பிறந்தது முதல், அதற்கு மூன்று வயது ஆகும் வரை, பொதுவாக விளையாட்டு குணமாகவே இருக்கும். உங்களுடன் விளையாடும் அல்லது பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடும். ஆனால், 3 வயதாகும் போது, அதற்கென சில பொறுப்புகள் உருவாகின்றன. அதனை அவர்கள் சரியாக மேற்கொள்ள பயிற்சி அளிக்க வேண்டியது நமது கடமை.
என்னங்க இப்படி சொல்றீங்க 3 வயதில் என்ன தெரியும் அவர்களுக்கு என்று கேட்டால், 3 வயதில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் தற்போதைய தலைமுறையினர் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். கரோனா காரணமாக 3 வயது குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும், சில பழக்க வழக்கங்களை அவர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.
வாருங்கள் அது என்னவென்று பார்க்கலாம்..
1. சின்ன சின்ன வேலைகளை அவர்களே செய்ய பழக்கப்படுத்துகிறீர்களா? செருப்பு அணிவது வரை நீங்கள்தான் உதவுகிறீர்களா?
2. காலையில் எழுந்ததும் பல் துலக்க வேண்டும் என்பது அவர்களுக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறதா? முதல் இரண்டு நிமிடம் அவர்களே அதைச் செய்யலாம். பிறகு அதனை முடித்து வைப்பதாக வேண்டுமானால் நீங்கள் இருக்கலாம்.
3. அவர்கள் இருக்குமிடத்திலேயே சிறுநீர் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டு மெல்ல கழிவறைக்குச் செல்வது அல்லது உங்களிடம் தெரிவிப்பதற்கு பழக்கப்படுத்திவிட்டீர்களா?
4. குழந்தைக்கு தான் சாப்பிட்ட தட்டு அல்லது பால் குடித்த டம்பளரை எங்கே வைக்க வேண்டும் அல்லது பாத்திரம் துலக்கும் இடத்தில் சேர்க்க வேண்டும் என்பது தெரியுமா? அவ்வாறு செய்யும் பழக்கம் உள்ளதா?
5. மூன்று வேளை உணவையும் அவர்களே சாப்பிடாவிட்டாலும், ஏதேனும் ஒரு உணவைக் கொடுத்து அவர்களே சாப்பிட பழக்கப்படுத்தியிருக்கிறீர்களா? சிந்தினாலும் கொட்டினாலும் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவையாவது அவர்களே உண்ண பழக்கப்படுத்தியிருக்க வேண்டும்.
6. அவர்களது முழு ஆடையையும் அவர்களால் அணிந்து கொள்ள முடியாது. ஆனால், நிச்சயம் ஒரு ஆடையை எவ்வாறு அணிய வேண்டும் என்பதை அவர்கள் முயற்சித்துப் பார்க்கும் நேரம் இது. அவ்வாறு அவர்கள் முற்பட்டால் அதற்கு அனுமதித்திருக்கிறீர்களா?
6.1 இரண்டு சட்டைகளை எடுத்துக் கொண்டு வந்து கையில் கொடுத்தாலும் கூட, அதனை வெளிப்படுத்தாமல், அவர்கள் அணிய வேண்டிய ஆடைகளை அவர்களை தேர்வு செய்ய வைப்பதும் நல்லதே. அவர்கள் எதைத் தேர்வு செய்தாலும் அதனை விமரிசிக்க வேண்டாம்.
7. சாப்பிட்டதும் கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, எப்போதும் சாப்பிடும் முன்பும், பிறகும் என அவர்களாகவே கைகழுவ பழக்கப்படுத்தப்பட்டிருப்பது மிக அவசியம். அதை செய்திருக்கிறீர்களா?
8. அவர்களது பொம்மை, விளையாட்டுப் பொருள்களை விளையாடி முடித்ததும் அவர்களே அதனை எடுத்த இடத்தில் வைக்கப் பழக்கப்படுத்துங்கள். இது மிகவும் அவசியம்.
9. கீழே ஏதேனும் பொருள்கள் இருந்தால் அதனை எடுத்து அதற்குரிய இடத்தில் வைக்கப் பழக்கப்படுத்தலாம். அவ்வாறு குழந்தை செய்ததும் அதனை கைதட்டி பாராட்டலாம்.
10. நீங்கள் செய்யும் வேலைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். மிகச் சிறிய வேலைகளாக இருந்தாலும், அவர்களுக்கும் அதனை சொல்லிக் கொடுத்து அதனை உங்களுடன் சேர்ந்து செய்ய வைத்துப் பழக்கியிருக்கலாம்.
மேற்கண்ட விஷயங்களுக்கு பெரும்பாலும் நீங்கள் ஆம் என்ற பதிலை வைத்திருந்தால், தேர்வில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். உங்கள் பிள்ளையும் பள்ளிக்குச் செல்லும் போது மிகச் சிறந்த பள்ளி மாணவராகத் திகழ்வார். 5க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு ஆம் என்று சொல்லியிருந்தால்.. நீங்கள் விரைவில் சிறந்த பெற்றோராக அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.
ஐந்துக்கும் குறைவான ஆம்களைக் கொண்டிருந்தால், விரைவில் நீங்கள் சிறந்த பெற்றோராக மாற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்.