அழகு நிலையத்திற்கு வந்த பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; 3 பேர் போக்சோவில் கைது - சிவகங்கை மாவட்ட காவல்துறை

சிவகங்கை மாவட்ட காவல்துறை பத்திரிக்கை செய்தி - 15.11.2021

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் பள்ளியில் பயின்ற பள்ளி மாணவி தன்னுடைய வகுப்புத்தோழி மூலமாக அறிமுகமான அழகு நிலையத்திற்கு தன்னுடைய தோழியுடன் கண்புருவம் திருத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அழகு நிலைய பொறுப்பாளருடன் நட்புரீதியாக பழக்கம் ஏற்பட்டு, பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் அத்துமீறல் செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதன்பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில், தேவகோட்டையைச் சேர்ந்த மணிமாறன் மகன் விக்னேஷ் (28), காரைக்குடியைச் சேர்ந்த பொன்னுவேல் மனைவி லெட்சுமி (45) மற்றும் ஒரு நபர் மீது காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப்பின் எதிரிகள் லெட்சுமி, விக்னேஷ் என்பவரையும் மற்றொரு நபரையும் கைது செய்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திருமதி.மகேஸ்வரி விசாரணை செய்து வருகிறார். மேலும் தலைமறைவாக உள்ள டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இது சம்மந்தமாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் த.செந்தில்குமார் அவர்கள் தெரிவிக்கும்போது யாரேனும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாலோ அதற்கு உடந்தையாக இருந்தாலோ அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும் யாரேனும் 18 வயதிற்குட்பட்ட சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டால் எந்தவித தயக்கமுமின்றி உடனடியாக அருகிலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செல்போன் தொடர்புகளை கண்காணிக்குமாறும் மாணவ, மாணவியர்கள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வரும் போலிப் புகைப்படங்களை, ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஏதேனும் பாலியல் அத்துமீறல் செய்கையை தொலைபேசியிலோ, நேரிலோ, வீடியோ அழைப்பிலோ தொந்தரவு செய்தால் உடனே அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது அவசர அழைப்பு எண் 100 அல்லது குழந்தைகள்நல உதவி அழைப்பு எண் 1098 என்ற எண்ணிற்கோ தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பாதிப்பிற்குள்ளாகும் சிறுமிகள் மற்றும் குடும்பத்தினரின் மனநிலையை காயப்படுத்தும் விதமாக அவர்களின் மன உறுதியை சிதைக்கும் அளவிற்கு இழிவுபடுத்தும் விதமாக மிகைப்படுத்தப்பட்ட, நடக்காத நிகழ்வுகளை, உண்மைக்குப் புறம்பான செய்திகளை சமூக வலைதளங்களிலோ அல்லது குறுஞ்செய்திகளிலோ வதந்தியை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post